புதுடெல்லி: ராஜஸ்தானில் முதல் முறையாக அஜ்மீர் – டெல்லி கன்டோன்மென்ட் ரயில் நிலையம் இடையே இயக்கப்பட்ட, ‘வந்தே பாரத்’ ரயிலை பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அஜ்மீர் மற்றும் டெல்லி கன்டோன்மென்ட் ரயில் நிலையம் இடையே நேற்று இயக்கப்பட்டது. இதற்கான நிகழச்சி ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று, வந்தே பாரத் ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இது கடந்த 2 மாதங்களில் தொடங்கப்பட்ட 6-வது வந்தே பாரத் ரயிலாகும்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ராஜஸ்தானுக்கு முதல் வந்தே பாரத் ரயில் கிடைத்துள்ளது. இது போக்குவரத்தையும், சுற்றுலாவையும் ஊக்குவிக்கும். வளர்ச்சி, நவீனம், நிலைத்தன்மை மற்றும் தன்னம்பிக்கையின் மறு பெயராக வந்தே பாரத் ரயில் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்துக்கான ரயில்வே பட்ஜெட் கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.700 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.9,500 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களில், 6 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத் துள்ளது. இந்த ரயில்களை அறிமுகப்படுத்தியலிருந்து, அவற்றில் இதுவரை சுமார் 60 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
இவற்றின் வேகம் மக்களின் பயண நேரத்தை குறைத்துள்ளது. பாதுகாப்பான, வேகமான மற்றும் அழகான ரயிலாக வந்தே பாரத் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது பல அரசியல் நெருக்கடிகள் இருந்தாலும், வளர்ச்சி திட்டத்துக்காக நேரம் ஒதுக்கி ரயில்வே விழாவில் பங்கேற்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எனது சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அசோக் கெலாட்டின் இரண்டு கைகளிலும் லட்டுக்கள் உள்ளன. ரயில்வே அமைச்சர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் மற்றும் ரயில்வே வாரியத் தலைவரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்.
நம்பிக்கைக்கு நன்றி
சுதந்திரம் அடைந்த உடனே செய்யப்பட்டிருக்க வேண்டிய வேலைகள் பல, இன்னும் செய்யப்படாமல் உள்ளன. நீங்கள் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்தப் பணிகள் இன்று என் முன் நடைபெற வைத்துள்ளீர்கள். இது தான் உங்கள் நம்பிக்கை. உங்கள் நம்பிக்கைதான் எனது நட்பின் பலம். நட்பில் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.