சென்னை: சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து பாமக சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஜி.கே.மணி வாய்ப்பு கேட்டார்.
அப்போது பேரவைத் தலைவர், ‘‘இன்று காலையில் தானே கொடுத்துள்ளீர்கள். பிறகு எடுத்துக் கொள்கிறேன்’’ என்றார்.
ஆனால், ஜி.கே.மணி மற்றும் பாமக உறுப்பினர்கள், உடனடியாக தீர்மானத்தை எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்தினர். ஜி.கே.மணியும் தொடர்ந்து பேச வாய்ப்பு கேட்டார். ஆனால், பேரவைத் தலைவர் வாய்ப்பு அளிக்காமல், அவரை அமரும்படி தெரிவித்ததுடன், ‘‘சட்டப்பேரவை அரசியல் செய்யும் இடமில்லை. அரசியல் செய்ய வேண்டாம்’’ என்று கூறினார்.
ஆனாலும், தொடர்ந்து பேச அனுமதிக்கும்படி வலியுறுத்திய ஜி.கே.மணி உள்ளிட்டோர், பின்னர் கோஷம் எழுப்பியபடி, பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி கூறியதாவது: பெரும்பான்மையாக இருக்கும் வன்னிய சமுதாய மக்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேற, தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டாகிறது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை வழங்கி, 3 மாத காலமாகியும் இடஒதுக்கீடு வழங்கவில்லை. மேலும், ஆணையத்துக்கான காலக்கெடு 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது. சமூக நீதியுடன் செயல்படும் தமிழக அரசு, காலம் தாழ்த்தாமல் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வலியுறுத்தி பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராமதாஸ் அறிக்கை: இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிக்க வேண்டும் என்ற ஆணை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு கடந்த ஜன.12-ம் தேதி வழங்கப்பட்டது. இப்போது காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டி ஆணையம் முன்வைத்துள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தமிழகத்தில் வன்னியர்களுக்குத் தான் மிக நீண்ட, மிக அதிக போராட்ட வரலாறு உண்டு.
ஆனால், அத்தகைய சூழலை ஏற்படுத்தி விடாமல், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக மே 31-க்குள் வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை பேரவையில் நிறைவேற்றி வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும். இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்.