மும்பை விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணியின் பாஸ்போர்ட், போர்டிங் பாஸை விமான நிறுவன ஊழியர் சோதனை செய்தார். அப்போது இரண்டிலுமிருந்த புறப்பாடு முத்திரை மாறுபட்டிருந்தது. அதனால் சந்தேகமடைந்த விமான நிலைய ஊழியர் ஆய்வுசெய்ததில் அந்தப் பயணி போர்டிங் பாஸை மாற்றி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
அதற்குள் விமானம் லண்டனுக்குச் சென்றடைந்தது. அங்கு சென்ற பிறகுதான், அவர் தான் யார் என்பதையும், என்ன காரணத்துக்காக லண்டனுக்கு வந்தார் என்பது குறித்தும் தெரிவித்தார். இலங்கையைச் சேர்ந்த அவர், வேலை வாய்ப்புக்காக ஜெர்மனைச் சேர்ந்த வேறு ஒரு பயணியிடம் தனது போர்டிங் பாஸை மாற்றி வாங்கி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பயணி மீண்டும் மும்பைக்கு அனுப்பப்பட்டார்.
பின்னர் அவர் மும்பையில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது அவரும், ஜெர்மனைச் சேர்ந்த பயணி ஒருவரும் சேர்ந்து மும்பை விமான நிலைய பாத்ரூம் ஒன்றில் சந்தித்து போர்டிங் பாஸை மாற்றியது தெரியவந்தது. இலங்கை பயணியிடம் போர்டிங் பாஸ் பெற்ற ஜெர்மன் பிரஜை, காட்மாண்டுவுக்குச் சென்றிருந்தார். அதனால், அவரும் கைதுசெய்யப்பட்டார். இருவரும் மும்பை விமான நிலையத்துக்கு அருகிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்திருக்கின்றனர். அப்போது இருவருக்குமிடையே ஹோட்டலில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் இருவரும் சேர்ந்து போர்டிங் பாஸை மாற்றிக்கொள்ள முடிவுசெய்தது தெரியவந்தது.
ஜெர்மன் பிரஜை தன்னிடமிருந்த போர்டிங் பாஸை மாற்றிக்கொள்ள இலங்கை பிரஜை பணம் எதுவும் கொடுத்தாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இருவர்மீதும் மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளில் மும்பை போலீஸார் வழக்கு பதிவுசெய்து இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.