2023 தமிழ்ப் புத்தாண்டுப் படங்களுக்கு வரவேற்பு உள்ளதா?

2023ம் வருடத்தின் தமிழ்ப் புத்தாண்டு நாளை ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல், தீபாவளிக்கு எப்படி முக்கியமான புதிய படங்கள் வருகிறதோ அது போல தமிழ்ப் புத்தாண்டுக்கும் புதிய படங்கள் வெளிவரும். இந்த வருடம் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் எதுவும் வரவில்லை. இருந்தாலும் அடுத்த கட்ட நடிகர்களின் படங்கள் வருகின்றன.

முதலில் அறிவிக்கப்பட்ட படங்களிலிருந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்', யோகி பாபு நடித்துள்ள 'யானை முகத்தான்' ஆகிய படங்கள் போட்டியிலிருந்து விலகிவிட்டன. ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்' படத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இன்று மேல்முறையீட்டு விசாரணை நடைபெற உள்ளது. அதற்குப் பிறகே நாளை படம் வெளிவருமா இல்லையா என்பது தெரிய வரும்.

ருத்ரன்
ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'ருத்ரன்' படத்திற்கான டிரைலருக்கு எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யு டியுபில் அந்த டிரைலர் 12 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. படத்திற்குத் தடை இருந்தாலும் ஆன்லைன் இணையதளங்களில் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சிகளும் சில தியேட்டர்களில் நடைபெறுகிறது. 10 சதவீத முன்பதிவு கூட நாளை காட்சிகளுக்கு நடைபெறவில்லை என்பது அதிர்ச்சிகரமான ஒரு தகவல். பல தியேட்டர்களில் 20க்கும் குறைவான டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுமுறை தினங்களான அடுத்த மூன்று நாட்களின் நிலைமையும் இதேதான். இந்தப் படம்தான் ஓரளவிற்கு வசூலிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் முன்பதிவு இந்த அளவிற்கு மந்தமாக இருப்பது எதிர்பார்க்காத ஒன்று.

திருவின் குரல்
அருள்நிதி, பாரதிராஜா நடித்துள்ள 'திருவின் குரல்' படத்திற்கு யு டியூபில் 17 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. இப்படம் ஒரு பரபரப்பான த்ரில்லர் ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சிறந்த கதைகளைத் தேர்வு செய்து படங்களில் நடித்து வரும் அருள்நிதி இந்தப் படத்தையும் அப்படித்தான் தேர்வு செய்திருப்பார் என எதிர்பார்க்கலாம். இந்தப் படத்திற்குக் காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடைபெறுகிறது. பேமிலி சென்டிமென்ட் கலந்த ஆக்ஷன் படம் என படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்திருக்கிறார்.

சொப்பன சுந்தரி
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சொப்பன சுந்தரி' படத்திற்கு யு டியூபில் 35 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. இப்படத்திற்கான பத்திரிகையாளர் காட்சி நேற்று மாலையே போடப்பட்டுவிட்டது. படம் பார்த்தவர்கள் படம் மோசமாக இல்லை, பார்க்கும்படிதான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். இப்படத்திற்கான முன்பதிவு 'ருத்ரன்' படத்தை விடவும் கூடுதலாக உள்ளது.

ரிப்பப்பரி
மகேந்திரன் நடித்துள்ள 'ரிப்பப்பரி' டிரைலருக்கு யு டியுபில் 11 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. குறைவான தியேட்டர்களில் வெளியாகும் இப்படத்திற்கு மிக மிகக் குறைவான முன்பதிவே நடந்துள்ளது.

சாகுந்தலம்
சமந்தா நடித்துள்ள டப்பிங் படமான 'சாகுந்தலம்' படத்தின் டிரைலருக்கு யு டியுபில் 23 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. தமிழ் வெளியீட்டிற்காக இந்தப் படத்திற்காக எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. குறைவான தியேட்டர்களில் வெளியானாலும் சுமாரான முன்பதிவு இப்படத்திற்கு நடைபெற்றுள்ளது. படம் 3டியில் வெளியாவதும், சமந்தா என்ற நட்சத்திரத்திற்குக் கிடைக்கும் வரவேற்பும் அதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தப் படத்திற்காகத் தமிழில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்தியிருந்தால் இன்னும் வரவேற்பு கிடைத்திருக்கலாம். ஆனால், படக்குழு அதைச் செய்யாமல் போனதன் காரணம் தெரியவில்லை.

பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வுகள் ஏறக்குறைய கடைசி கட்டத்திற்கு வந்துவிட்டன. தமிழ்ப் புத்தாண்டிலிருந்து பல வகுப்புகளுக்கும் விடுமுறை ஆரம்பமாகும். அனைவரும் குடும்பத்துடன் தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்க்க விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களின் வரவேற்பை நாளை வெளியாகும் எந்தப் படம் பெறுகிறதோ அந்தப் படம்தான் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமையும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.