சென்னை: வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் கடந்த மாதம் 31ம் தேதி வெளியானது.
விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
முக்கியமாக இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் வரும் சண்டைக் காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில், விடுதலை படத்திற்கு ஸ்டண்ட் கோரியோகிராபி செய்துள்ள பீட்டர் ஹெய்ன் மிக உருக்கமாக பேசியது வைரலாகி வருகிறது.
விடுதலை பட பிரபலம் உருக்கம்: வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம், மார்ச் 31ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விடுதலை படத்தின் மேக்கிங் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற நிலையில், க்ளைமேக்ஸில் இடம்பெற்ற சண்டைக் காட்சியும் பாராட்டுகளைப் பெற்றது.
கொடைக்கானலில் உள்ள மிகக் குறுகலான குடியிறுப்புகளின் நடுவே, எடுக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சிகள் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. இந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் தான் முக்கியமான காரணமாகும். விடுதலை ஷூட்டில் ஒரு நாள் மட்டும் உடல்நிலை சரியில்லாமல் ஷூட்டிங் ஸ்பாட் செல்ல முடியவில்லை என கூறியுள்ளார் பீட்டர் ஹெய்ன். இந்நிலையில், தனது கேரியர் குறித்து பீட்டர் ஹெய்ன் பேசியது வைரலாகி வருகிறது.
மின்னலே படம் மூலம் முழுநேர ஸ்டண்ட் மாஸ்டராக பயணிக்கத் தொடங்கியவர் பீட்டர் ஹெய்ன். அதன்பிறகு தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் ஏராளமான படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் விடுதலை படம் குறித்து பேசியுள்ள அவர், விடுதலை படத்திற்காக என்னுடைய பெஸ்ட்டை கொடுத்துள்ளேன். அதேபோல், இதுவரை ஸ்டண்ட் கோரியோகிராபி செய்த படங்களிலும் அப்படி தான் தனது பெஸ்ட்டை கொடுத்துள்ளேன் என்றுள்ளார்.
மேலும், தனது உடல் முழுவதும் நிறைய ஸ்க்ரூக்கள் உள்ளன. அது நகர்வதை உங்களால் கூட பார்க்க முடியும். தன்னுடைய எலும்புகளும் தசைகளுக்குள் இல்லை. பெரும்பாலான எலும்புகள் ஸ்க்ரூவில் தான் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் தனது மண்டை ஓடு எலும்புகள் அனைத்துமே வெளியில் தெரியும்படி தான் உள்ளன. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, தன்னால் இன்னும் எத்தனை நாட்கள் வாழ முடியும் என தெரியவில்லை.
எப்படியும் இன்னும் கொஞ்ச நாட்கள் தான் வாழப் போறேன், அதுவரையும் ரசித்து வாழலாம் என முடிவில் இருக்கேன். திருமணம் ஆவதற்கு முன்னும், குழந்தைகள் வருவதற்கு முன்பும் இந்த சினிமாதான் எனக்கு எல்லாமுமாக இருந்தது. சினிமாவில் இதுவரை நான் செய்த எதையும் சொல்லிக்காட்டவும் விரும்பவில்லை. சினிமாவுக்காக என்ன செய்தேன் என்பது தனக்கு நன்றாக தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ஸ்டண்ட் காட்சிகளுக்காக உயரமான இடங்களில் இருந்து குதித்துள்ளேன், முதல்வன் படத்தில் ஒட்டுத் துணி இல்லாமல் உடலில் தீயோடு குதித்திருக்கிறேன், இப்படி எல்லாம் செய்திருந்தும் இந்த நொடியில் ஒரு அனாதையாக தான் இருக்கிறேன். மனைவி, குழந்தைகள் யாருமே இல்லை. மேலும், சமீபத்தில் ஏர்போர்ட் சென்றிருந்த போது, ரசிகர் ஒருவர் நலம் விசாரித்து என்னை கட்டிப்பிடித்தார். மேலும், அவரது கையில் தனது பெயரை டாட்டூவும் போட்டிருந்தார். இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் தன்னை கைவிடவில்லை எனத் தோன்றும் என உருக்கமாக பேசியுள்ளார் பீட்டர் ஹெய்ன்.