சம்மன்
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு (Arvind kejriwal) மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற ஏப்ரல் 16ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தேசிய கட்சி அந்தஸ்து பெற்ற பிறகு, அரவிந்த கெஜ்ரிவாலை முடக்க மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் சிங் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், ‘‘முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சதித்திட்டம்
பிரதமரின் நண்பர் அதானியின் கறுப்புப் பணம், பிரதமரின் கருப்புப் பணம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டசபையில் கூறிய நாளே, அடுத்தது நீங்கள் எண் என்று அவரிடம் கூறினேன். அதேபோல் தான் தற்போது நடந்துள்ளது. பிரதமரின் ஊழலை மறைக்க அவர்கள் அனைத்தையும் செய்வார்கள்’’ என்று காட்டமாக கூறினார்.
கடந்த பிப்ரவரியில், டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்தது. டெல்லி கலால் கொள்கை வழக்கில் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை
டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வருமானத்தை அதிகரிக்கவும், மதுபான விற்பனை நிலையங்களின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், கள்ளச்சந்தை மற்றும் மாஃபியா ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் டெல்லியை 32 மண்டலங்களாகப் பிரித்து அதில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 27 மதுபான விற்பனை கடைகள் வைக்கப்பட்டது. தனியார் பார்கள் மட்டும் நகரத்திற்கு வெளியே இயக்கப்பட்டது.
இந்தநிலையில் டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக பாஜகவினர் குற்றம்ட்சாட்டினர். மேலும் மதுபான கொள்கை மூலம் பெறப்பட்ட ஊழல் பணத்தை தான் கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியது எனவும் பாஜக (BJP) குற்றம்சாட்டியது. அதேபோல் இந்த ஊழலில் தென்னிந்திய அதிகாரப் புள்ளிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.
ரெய்டு
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா, புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரைத்தார். பின்னர் ஆகஸ்ட் மாதம், டெல்லி-என்சிஆர் மற்றும் பஞ்சாபில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. மனிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.