அம்பேத்கரின் 125 அடி உயர வெண்கல சிலையை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (KCR) இன்று திறந்து வைத்தார்.
சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசன சிற்பி அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பட்டியலின வகுப்பில் பிறந்து, நாட்டின் அரசியலமைப்பை வார்த்துக் கொடுத்தவர் டாக்டர் அம்பேத்கர் (Ambedkar). அதுவரை குறிப்பிட்ட மேல் தட்டு வகுப்பினர் மட்டுமே கல்வி கற்கும் உரிமை பெற்று வந்தநிலையில், வெளிநாட்டிற்குச் சென்று டாக்டர் பட்டம் வாங்கியவர் அம்பேத்கர். குறிப்பிட்ட சமூகம் மட்டுமே அறிவுடைய சமூகம் என மார்தட்டி கொண்டிருந்த நிலையில், அதை பொய்யாக்கி வாய்ப்பு கிடைத்தால் சாதி பேதம் இன்றி அனைவராலும் சாதிக்க முடியும் என நிரூபித்தவர் பாபாசாகேப் அவர்கள்.
அவர் உருவாக்கித் தந்த அரசியல் அமைப்புச் சட்டம், இந்தியாவை மதச்சார்பற்ற, ஜனநாயக, சமத்துவம் பொங்கும் நாடாக விளங்க முன்னேற்றி கொண்டு சென்று வருகிறது. இந்து பெண்களுக்கு அவர் இயற்றிய சட்டம், நாடாளுமன்றத்தால் மறுக்கப்பட்டாலும், பெண் விடுதலைக்கு ஒரு முன்னெத்தி ஏராக அமைந்தது. அதேபோல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு கோரியது அம்பேத்கரை நாட்டின் அனைத்து மக்களுக்கும் தலைவராக உயர்த்தியது.
இந்தநிலையில் டாக்டர் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது 125 அடி உயர சிலையை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் (KCR) இன்று திறந்து வைத்தார். நாட்டிலேயே உயரமான இந்த வெங்கலச் சிலை, ரூ.146.50 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள. ஹைதராபாத்தின் புகழ்பெற்ற ஹூசைன் சாகர் ஏரி கரையில், தலைமைச்செயலகத்திற்கு அருகில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலைக்காக 360 டன் துருபிடிக்காத இரும்பும், 114 டன் வெங்கலமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பிரம்மாண்ட சிலையை செய்த 98 வயதான சிற்பி ராம் வஞ்சி சுதாரை முதல்வர் கே.சந்திர சேகரராவ் பாராட்டினார். “தெலங்கானா தியாகிகள் நினைவிடம், மாநில சட்டப்பேரவை கட்டிடம் ஆகியவற்றுக்கு அருகில் இருக்கும் இந்தியாவின் உயரமான இந்த அம்பேத்கர் சிலை, தினமும் மக்களுக்கு உந்து சக்தியாகவும் மாநில நிர்வாகத்திற்கான ஊக்கமாகவும் இருக்கும்” என்று சந்திர சேகர ராவ் தெரிவித்திருந்தார்.
இன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக ஹெலிகாப்டரில் இருந்து சிலைக்கு மலர்கள் தூவப்பட்டன. இந்த விழாவில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
விழாவில் பங்கேற்க பொதுமக்களின் வசதிக்காக மாநில போக்குவரத்து கழகம் சார்பில் 750க்கும் அதிமான பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவில் பங்கேற்க வரும் மக்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரு லட்சம் இனிப்பு பொட்டலங்கள், 1.50 லட்சம் மோர், அதே அளவு தண்ணீர் பாக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.