சென்னை: அண்ணாமலை தனது ரபேல் வாட்ச் பில்லை இன்று வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து பலரும் அந்த பில் குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், திமுகவின் ராஜீவ் காந்தி சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் திமுகவினரின் சொத்து பட்டியல் என்று கூறி ஒரு எக்ஸல் சீட்டை வெளியிட்டார்.
அதில் பல்வேறு திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு என்று கூறி பல பாயிண்டுகள் இருந்தது. அதேபோல அண்ணாமலை தனது ரபேல் வாட்ச் குறித்தும் இந்த பிரஸ் மீட்டில் பேசியிருந்தார். அதுதான் இப்போது டிரெண்டிங் டாப்பிக்காக உள்ளது.
ரபேல் வாட்ச்: கடந்தாண்டே அண்ணாமலை கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் குறித்த இணையத்தில் பெரும் விவாதம் எழுந்தது. அப்போதே திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ரபேல் வாட்ச் பில்லை வெளியிட முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலுடன் தனது ரபேல் வாட்ச் பில்லையும் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இது அப்போதே பரபரப்பை கிளப்பியிருந்தது.
அண்ணாமலை கையில் கட்டியுள்ள ரபேல் வாட்ச் பெல் அண்ட் ராஸ் என்ற நிறுவனம் தயாரித்த வாட்ச் ஆகும். இதன் இந்திய மதிப்பு 4.40 லட்சம் ரூபாய் ஆகும். இந்த ரபேல் வாட்ச் குறித்து இன்று பேசிய அண்ணாமலை, “சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நபரிடம் இருந்து நான் ரபேல் வாட்சை வாங்கினேன்.. அவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். ரபேல் வாட்ச்சை அணிய வேண்டும் என்று விரும்பி, அவரிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினேன்.
பில் வெளியீடு: ரபேல் வாட்ச் வாங்கியதற்கான பில் அவரிடம் இருக்கிறது. அவரிடம் இருந்து நான் வாட்ச் வாங்கியதற்கான பில்லும் இருக்கிறது. இரண்டையும் இப்போது வெளியிட்டுள்ளேன். போலீஸ் அதிகாரியாக இருந்தபோது லஞ்ச பணத்தில் ரபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் திட்டமிட்டு பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அதற்கான ஆதாரம் தான் இது.
ரபேல் வாட்ச் வரிசையில் 147ஆவது வாட்சை நான் வாங்கியிருக்கிறேன்.. இதற்காக தனியாக சீரியல் நம்பரும் இருக்கிறது. அதற்கு உரிய பில் இருக்கிறது. இதை வைத்து சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்” என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இப்போது அண்ணாமலையின் இந்த ரபேல் வாட்ச் குறித்தே இணையத்தில் திமுகவினர் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்ச்சை: அதாவது அண்ணாமலை வெளியிட்ட 2 பில்களிலும் சீரியல் நம்பர் வேறு வேறாக உள்ளதாக கூறி விமர்சித்து வருகின்றனர். அதாவது சேரலாதன் வாங்கினதாக சொன்ன வாட்ச் BRO394EBl147 என்றும் அண்ணாமலை சேரலாதனிடம் வாங்கினதாக சொன்ன வாட்ச் BRO394DAR147 என்று இருப்பதாக கூறி வருகின்றனர்.
மேலும், முன்பு அண்ணாமலை அளித்த பேட்டியில் தன்னிடம் இருப்பது 149ஆவது வாட்ச் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்று 147ஆவது வாட்ச் என்று கூறிய நிலையில், அதையும் திமுகவினர் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே வாட்ச் வாங்க காசு கொடுத்ததாக அண்ணாமலையின் பாஸ்புக்கில் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று திமுகவின் ராஜீவ் காந்தி விமர்சித்துள்ளார்.
பரபர அட்டாக்: இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “வாட்ச் காசு கொடுத்து தான் வாங்கினேன் அதையும் அக்கவுண்டுல மே 27-2021 ஆம் தேதி கொடுத்தேன் அப்படினு.. Bank passbookலாம் வெளியிட்டீர்களே.. மே27 பெங்களூர்ல நீங்க சாப்பிட்ட பிரியானி தான் passbookல இருக்கு! எங்கே தேடினாலும் நீரு கொடுத்த 300000ரூ உங்க அக்கோன்டுல இல்லையே.. எல்லாம் பொய்.. பிராடு.. பித்தலாட்டம்!” என்று விமர்சித்திருந்தார், அவரது இந்த ட்வீட் இணையத்தில் இப்போது வேகமாக பரவி வருகிறது.