சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து கடந்த 2013ல் வெளியான கல்ட் கிளாசிக் திரைப்படம் தான் சூது கவ்வும். சுமார் 10 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் பார்ட் 2 உருவாகப் போகிறதாம்.
தாஸ் கதாபாத்திரத்தில் கடத்தல் டானாக விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார். பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் என பவர் ஹவுஸ் பர்ஃபார்மர்கள் பலரை அந்த படம் உருவாக்கியது என்றே சொல்லலாம்.
அந்த படத்தில் இடம்பெற்ற காசு பணம் துட்டு மணி மணி, மாமா டவுசர் கழண்டுச்சு பாடல்கள் எல்லாம் சந்தோஷ் நாராயணன் இசையை ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.
நலன் குமாரசாமி: நாளைய இயக்குநர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நலன் குமாரசாமி இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். டார்க் காமெடி படத்தை தமிழ் சினிமாவுக்கு சூப்பராக அறிமுகப்படுத்தி தியேட்டரில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
அதன் பின்னர் காதலும் கடந்து போகும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி மாயவன், சூப்பர் டீலக்ஸ் படங்களுக்கு கதையாசிரியராக பணியாற்றினார். குட்டி ஸ்டோரி படத்தில் ஒரு போர்ஷனை இயக்கிய நலன் குமாரசாமி நடிகர் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி நடிக்கும் புதிய படத்தை சத்தமில்லாமல் இயக்கி வருகிறார்.
சூது கவ்வும்: 2013ம் ஆண்டு கல்ட் கிளாசிக் படமாக வெளியான சூது கவ்வும் திரைப்படம் நியூ ஏஜ் ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தது. கிறுக்கத்தனமான ஒருத்தன் எப்படி கடத்தல் செய்யுறான் என்பதும், அரசியல்வாதியின் மகன்கள் தங்களை தாங்களே கடத்தியது போல டிராமா செய்து கடைசியில் அந்த கடுப்பான போலீஸை மண்டயை காய வைப்பது என சிம்பிள் பட்ஜெட்டில் பக்கா படத்தை இயக்கி இருப்பார் நலன் குமாரசாமி.
சூது கவ்வும் பார்ட் 2 வருது: 10 ஆண்டுகளுக்கு பிறகு சூது கவ்வும் படத்தின் 2ம் பாகத்தை தயாரிப்பாளர் சிவி குமார் ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் இருக்கும் என்றும் தனிப் படமாக இருக்காது என்றும் தயாரிப்பாளர் சிவி குமார் கூறியுள்ளார்.
மேலும், சஞ்சிதா ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவில்லை, வேறு ஒரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், ரமேஷ் திலக், ராதா ரவி, உள்ளிட்ட சிலர் இந்த படத்திலும் நடிக்க உள்ளனர். அர்ஜுன் என்பவர் படத்தை இயக்கப் போகிறார் என்றும் கூறியுள்ளார்.
ஹீரோ யாரு?: ஆனால், இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக ஹீரோவாக மிர்ச்சி சிவா நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த சூது கவ்வும் ரசிகர்கள், அந்த படத்தை அப்படியே விட்டுடுங்க, தேவையில்லாம கெடுத்து வைக்காதீங்க என கமெண்ட் போட்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
காமெடியாக நடித்து வரும் மிர்ச்சி சிவா நடிப்பில் சமீபத்தில் வெளியான பல படங்கள் தோல்வியை தழுவி வரும் நிலையில், சூதுகவ்வும் 2 திரைப்படம் அவருக்கு கை கொடுக்குமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.