சென்னை: தமிழகத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களில் பணியாளர்களுக்கு குடிநீர், கழிப்பறை, ஓய்வறை, உணவறை மற்றும் முதலுதவி வசதிகள் செய்வதை உறுதி செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் நேற்று அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் நேற்று தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதாவை, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பணி நிபந்தனைகளை ஒழுங்குபடுத்த, கடந்த 2016-ம் ஆண்டு மாதிரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பணி நிபந்தனைகள் ஒழுங்குபடுத்துதல் சட்ட முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மாதிரி சட்டமுடிவின் வகைமுறைகளுக்கு ஏற்ப, நடைமுறையில் உள்ள சட்டத்தின் வகைமுறைகளை திருத்தம் செய்ய மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது. அதன்படி, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது.
அதன்படி, கடந்த 1947-ம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில், 22-ஏ என்ற பிரிவுக்குப் பின், பி, சி, டி, இ என்ற பிரிவுகள் உட்புகுத்தப்படுகிறது. அதன்படி, வேலையளிப்பவர் ஒவ்வொருவரும் கடை அல்லது நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து நபர்களுக்கும் பொருத்தமான இடங்களில், போதிய அளவு சுகாதாரமான குடிநீரை வழங்கவும், பராமரிக்கவும் பயனுள்ள ஏற்பாட்டை செய்ய வேண்டும்.
போதிய காற்றோட்டம்: வேலை அளிப்பவர்கள் ஒவ்வொருவரும் போதிய எண்ணிக்கையில் கழிப்பிடம் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்களை ஏற்பாடு செய்துதர வேண்டும். அவை பணிபுரிவோருக்கு வேலை நேரத்தின் அனைத்து நேரங்களிலும்அணுகக் கூடியவகையில், மிகவும் வசதியாக அமைந்திருக்க வேண்டும்.
மேலும், பணிபுரிவோருக்காக, குடிநீர் வசதியுடன் கூடிய போதிய மற்றும் பயனுள்ள ஓய்வறை, உணவறையை ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த அறை போதிய காற்றோட்டம், வெளிச்சத்துடன், சுத்தமாக இருக்க வேண்டும்.
ஓய்வறைகள், உணவறைகளில் போதிய நாற்காலிகள் அல்லதுசாய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். முதலுதவி வசதிகளை பணிபுரியும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.