சென்னை : தமிழ் மொழி மீது இந்தியை திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய நிலையில், ஆளுநர் ரவி கூறியிருப்பது நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. ஆளுநரின் கருத்தை வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி. திமுக அரசுக்கும் – ஆளுநருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநரின் கருத்தை வரவேற்பதாகக் கூறியுள்ளார் அமைச்சர் பொன்முடி.
ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறும் உண்டு. இந்தி மொழியை விடத் தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமைவாய்ந்த மொழி. தமிழ் மீது இந்து உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது.” எனப் பேசினார்.
ஆளுநர் – திமுக மோதல் : ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றது முதலே திமுக அரசுக்கும், அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பது, அரசின் கொள்கைளை பொதுவெளியில் விமர்சிப்பது என ஆளுநர் தொடர்ந்ததால் திமுகவினரும் ஆளுநரை விமர்சித்து வந்தனர்.
இதனிடையே, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. கடந்த மாதம் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார்.
மீண்டும் மீண்டும் சர்ச்சை : இந்நிலையில், சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், அரசின் மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள் எனக் கூறினார். ஆளுநரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேச்சு மாறுதே : இந்தச் சூழலில், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ரவி உடனடியாக ஒப்புதல் அளித்தார். திமுக அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே, மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் தான் தமிழ் மீது எந்த மொழியையும் திணிக்க முடியாது எனப் பேசியுள்ளார் ஆளுநர் ரவி.
தமிழ் மொழியின் மீது இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது குறித்துப் பேசியுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழ் மீதும் தமிழர்களின் கொள்கையின் மீதும் புரிந்து கொண்டு தமிழ்நாடுஆளுநர் ரவி தமிழ் தான் சிறந்த மொழி என்று பேசி இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ் மொழியின் மீது இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் ரவி கூறியிருப்பது நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. ஆளுநரின் கருத்தை வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.