கர்நாடகாவில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது: பாஜகவின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. பாஜக சார்பில் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக மே 10-ம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியிலும், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மஜத முன்னாள் முதல்வர் குமாரசாமி சென்னபட்ணா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று கோகாக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் ஷிகோன் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். 234-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்ததை நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.

வேட்பு மனு தாக்கல் தொடங்கியபோதும் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. விடுபட்டுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

பாஜக சார்பில் முதல்கட்டமாக 189 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்டமாக நேற்று முன் தினம் இரவு 23 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிலும் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடும் ஹுப்ளி தொகுதியின் பெயர் இடம்பெறாததால் அவர் அதிருப்தி அடைந்தார். 6 முறை நான் வென்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்காவிட்டால் சுயேச்சையாக போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகிய‌ நாகராஜாவுக்கு கல்கட்கி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோலார் தங்கவயல் தொகுதியில் அஷ்வினிக்கு 2-வது முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் இன்னும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்பட‌வில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பாஜக இதுவரை வெளியிட்டுள்ள 212 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் 17 எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்கப்படவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.