இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி உருவாகியுள்ளது.
கொரோனா பொது முடக்கம்!
கொரோனா பரவலால் உயிரிழப்புகளும், உடல் நலம் பாதிப்பும் மிக அதிக அளவில் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உலகளவில் மக்கள் துயரத்தை சந்தித்தனர்.
கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த இந்த அவல நிலை தடுப்பூசி பரவலாக பயன்பாட்டுக்கு வந்த பின்னரே முடிவுக்கு வந்தது.
கடந்த ஓராண்டு காலமாக மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது எனும் செய்தி இடியாக வந்திறங்கியுள்ளது.
தினசரி பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று (ஏப்ரல் 13) 10 ஆயிரத்தை கடந்தது. நேற்று ஒரே நாளில் 10,158 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாநிலங்கள் வாரியாக நிலவரம்!
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,089 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில், 1,527, மகாராஷ்டிராவில் 1,086, அரியானாவில் 855, தமிழ்நாட்டில் 469, இமாச்சலபிரதேசத்தில் 440, உத்தரபிரதேசத்தில் 549, குஜராத்தில் 417, கர்நாடகாவில் 498, ராஜஸ்தானில் 293, சத்தீஸ்கரில் 370, ஒடிசாவில் 258, பஞ்சாப்பில் 322, ஜம்முகாஷ்மீரில் 151, புதுச்சேரியில் 104, உத்தரகாண்டில் 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த நிலவரம்!
இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 97 ஆயிரத்து 269 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 49,622 பேர் சிகிச்சையில் உள்ளனர்.