நாடு முழுவதும்
கொரோனா வைரஸ்
பரவல் படிப்படியாக வேகமெடுத்து வருகிறது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த 13ஆம் தேதி காலை நிலவரப்படி 44,998 கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். தலைநகர் டெல்லியில் ஒருநாள் பாதிப்பு 1,000ஐ தாண்டியது. இது கடந்த 7 மாதங்களில் காணாத ஏற்றம் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
வைரஸ் தொற்று பரவலின் பாசிடிவ் விகிதம் 23.8 சதவீதமாக காணப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையின் (LNJP Hospital) இயக்குநர் சுரேஷ் குமார் பல்வேறு தகவல்கள் பகிர்ந்திருக்கிறார். அதாவது, எங்கள் மருத்துவமனை வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
XBB.1.16 உருமாறிய வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் 4 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா தடுப்பூசி போடவில்லை. எனவே நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், கண் பாதிப்பு, வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
பள்ளிகள், பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் தேவை. தற்போதைய நிலவரம் தொடர்ந்தால் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு விடும். எங்கள் மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் அதிக அளவில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றுங்கள். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள். மருத்துவமனைகளில் அவசரகால ஒத்திகை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனைத்தும் போதிய அளவில் இருக்கின்றன.
சமீபத்தில் 10 கொரோனா நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 440 படுக்கைகள் இன்னும் காலியாக உள்ளன. எலும்புருக்கி நோய், புற்றுநோய், நுரையீரல் பாதிப்புகள் போன்ற இணை நோய்கள் இருப்பவர்கள் தான் கொரோனா தொற்றால் அதிகம் உயிரிழக்கின்றனர். இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுரேஷ் குமார் கேட்டுக் கொண்டார்.
டெல்லி அரசின் கீழ் செயல்படும் 2,000 படுக்கைகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை LNJP என்பது குறிப்பிடத்தக்கது. இது சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே செயல்பட்டு வருகிறது. முதலில் இர்வின் மருத்துவமனை என்று அழைக்கப்பட்டு வந்தது. 1977ல் சுதந்திர போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண் நினைவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.