தமிழ் மாதங்களில் தொடக்க மாதமான சித்திரையின் முதல் நாளிலோ, வளர்பிறை அன்றோ மாடுகளைத் தயார் செய்து ஊர்ப் பொது நிலத்தில் ஊரிலுள்ள விவசாயிகள் ஒன்றுகூடி ஏர்பூட்டி உழுவதற்கு `பொன்னேர் உழுதல்’ என்று பெயர். ஊருக்குப் பொதுவான நிலத்தில் பொன்னேர் பூட்டி உழுவார்கள். இதைத் தொடர்ந்து அவரவருக்குச் சொந்தமான நிலங்களில் உழுவார்கள். இப்படி ஊர் மக்கள் ஒன்றுகூடி உழவின் சிறப்பை உணர்த்தும் வகையில் சித்திரை முதல் நாள் செய்யும் உழவுக்கு பொன்னேர் என்று பெயர். தமிழகம் முழுவதும் இந்த வழக்கம் இருந்து வருகிறது. உழவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த நிகழ்வு சங்க காலந்தொட்டே இருந்து வருகிறது என்கிறார் கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறையின் கௌரவ விரிவுரையாளர் முனைவர் கோ.சீனிவாசன்.
அவர் பேசியபோது, “ஆண்டின் முதல் நாளில் விவசாய நிலத்தில் உழவு ஓட்டினால் அந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அதேபோன்று கோடையில் உழவு ஓட்டினால், களைகள் மட்டுப்படும். மண் வளமாகும் என்ற அறிவியலும் காலங்காலமாக மக்களிடையே கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பொன்னேர் உழவுக்கு சாட்சியாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் என்ற ஊர் சான்றாக இருந்து வருகிறது.
‘பொன்னேர் அகரம்’ பென்னாகரமாகியது என்பதை ‘தர்மபுரி மாவட்டம்: ஊர்களும் பெயர்களும்’ என்ற நூலில் விரிவாக பதிவு செய்திருக்கிறேன். இது சம்பந்தமான கள ஆய்வின்போது பென்னாகரத்துக்கு அருகிலுள்ள அளேபுரம் என்ற ஊரின் அருகில் ஏர்க்கலப்பையுடன் கூடிய நடுகல் ஒன்றும் உள்ளது.
அதன் அருகில் வீரன் நின்ற நிலையிலும் அவனது கையில் நீண்ட குச்சியை பிடித்தபடியும் இருக்கிறான். அவன் அருகில் நாய் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
வீரனுக்கு அருகில் பெண்ணின் புடைப்பு சிற்பமும் உள்ளது. இந்த நடுகல்லின் வலது பக்கம் மேல் பகுதியில் இரண்டு எருதுகளைக் கொண்டு ஏர்க்கலப்பையுடன் உழுகின்ற அமைப்பும் காணப்படுகிறது.
சங்க கலத்தில் இந்தப் பகுதி தகடூர் நாட்டின் கீழ் இருந்து வந்தது. ஊரின் தலைவர்தான் முதலில் ஏர்க்கட்டி உழ வேண்டும். பிறகுதான் மற்றவர்கள் ஏர்க்கட்டி உழவேண்டும் என்ற வழக்கமும் இருந்து வந்துள்ளது.
ஊர் தலைவர் பொன்னேர் கட்டும்போது இறந்ததன் நினைவாகவோ, பொன்னேர் பூட்டும் தலைவன் இறந்ததன் நினைவாகவோ எடுக்கப்பட்ட நடுகல்லாக இது இருக்கலாம். அதனால்தான் ஏர்க்கலப்பையுடன் எருதுகளையும் நடுக்கல்லின் மேல் பகுதியில் காட்டியுள்ளனர். இத்தகைய நடுகல் எனக்குத் தெரிந்து தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்கவில்லை. சமய, சடங்குகளைச் சாராத உழவு பண்பாட்டின் அடையாளமாக பொன்னேர் பூட்டுதல் இருந்து வந்திருப்பதை இந்த நடுகல் மூலமாக அறிய முடிகிறது.
மேற்கண்ட கருத்தோடு ஒப்பிட்டு ஆராய்ந்தால் பொன் + ஏர் + அகரம் , ‘பென்னாகரம்’ என்று மாறியுள்ளாது. தமிழர்கள் காரண காரியத்தோடு பெயரிடும் வழக்கம் தொல்காப்பிய காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இப்பகுதியில் பொன்னேர் கட்டும் வழக்கம் சங்ககாலத்தில் இருந்தே வந்திருக்கலாம். அதன் அடிப்படையில் பொன்னேர் அகரம், பென்னேர் அகரமாக மாறி தற்போது பென்னாகரமாக மாறியிருக்கிறது” என்றார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் என்ற ஊர்ப் பெயருக்குப் பின்னால் விவசாயமும், அதைச் சார்ந்த ஒரு பண்பாடும், வரலாறும் மறைந்துள்ளது.