சென்னை: தமிழனை உயர்த்தும் அரசியல் தமிழகத்தில் இல்லை என்றும், கொள்ளை அடிக்கும் அரசியல்தான் இருந்து கொண்டிருக்கிறது என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,”இவர்கள் செய்யக் கூடிய அரசியல் என்பது பாழ்பட்ட அரசியல். தமிழ் சமுதாயத்தை எந்த விதத்திலும் உயர்த்தக் கூடிய அரசியல் இது இல்லை. பணத்தை வாங்கிக் கொண்டு, பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தலில் எப்படி வெற்றி பெறலாம் என்பதற்காக மட்டுமே அரசியல் நடத்தி வருகிறார்கள். தமிழனை மையமாக வைத்து அவனை எப்படி உயர்த்த வேண்டும் என்று அரசியல் நடைபெறவில்லை.
சொத்துப் பட்டியலை பார்க்கும் போதே நமக்கு தெரியும். 12 பேரின் சொத்து மட்டும் தான் இது. இவர்களை எதிர்த்து ஒரு சாமானிய மனிதன் தேர்தலில் போட்டியிட்டு எப்படி வெற்றி பெற முடியும். தமிழகத்தில் ஒரு சாமனிய மனிதன் கே.என்.நேருவை எதிர்த்து திருச்சியில் தேர்தலில் எப்படி நிற்க முடியும். ஒரு ஓட்டுக்கு ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை. இது தமிழகத்தின் ஜனநாயகத்திற்கான போராட்டம். மக்கள் மன்றத்தில் லஞ்சத்தை முக்கியமான விஷயமாக மாற்றவில்லை என்றால் தமிழ் சமூகத்திற்கு மிகப் பெரிய கேடு காத்துக் கொண்டு உள்ளது.
நிறைய எதிரிகளை இன்று சம்பாதித்து விட்டேன். ஒரே செய்தியாளர் சந்திப்பில் நிறைய எதிரிகளை சம்பாதித்து விட்டேன். பெரிய, பெரிய எதிரிகளை சம்பாதித்து விட்டேன். தமிழக அரசியலை பொறுத்த வரையில் இதை எல்லாம் பேசாமல் இருப்பார்கள். நான்கு வருடம் எதிர்க் கட்சியாக இருந்து விட்டு, கடைசி 6 மாதம் 2 அறிக்கை கொடுப்பார்கள். 2 போராட்டம் நடத்துவார்கள். தேர்தல் வந்துவிடும். 4 சதவீதம் ஓட்டு மாறும். ஆட்சி மாறி விடும்.” இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக செய்திகளை படிக்க :
ரூ.3 லட்சம்: ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்ட அண்ணாமலை
ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை!