சென்னை: இந்தியைவிட தமிழ் மிகவும் பழமையானது. தமிழ் மீது இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் மாணவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடினார். முன்னதாக, சிறந்த சமூகப் பணிக்காக முன்னாள் மேயர் சைதை துரைசாமி, காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன், அமர் சேவா சங்க நிர்வாகி சங்கரராமன் உள்ளிட்ட 10 பேரை அவர் கவுரவித்தார்.
தொடர்ந்து ஆளுநர் பேசியதாவது: இந்தியாவின் ஆன்மிகம், கலாச்சாரத் தலைநகராக தமிழகம் தமிழ்கிறது. தமிழகத்துக்கு 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு உண்டு. 1960-ம் ஆண்டுகளில் இந்தியைத் திணிக்கும் முயற்சி நடைபெற்றது.
இந்தியைக் காட்டிலும் தமிழ் மிகவும் பழமை வாய்ந்தது. சம்ஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழியாகும். தமிழ் மீது இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது. பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தைக் கற்றுக் கொள்ள நினைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் தமிழை ஆழமாகப் படித்து, தமிழறிஞர்களாக உருவாக வேண்டும்.
தமிழின் மிக முக்கியமான நூலான திருக்குறளில் சமூகத்துக்குத் தேவையான அனைத்துக் கருத்துகளும் உள்ளன. எனவே, அனைவரும் திருக்குறளை ஆழமாகப் பயில வேண்டும். திருக்குறள் போலவே தமிழில் பல இலக்கியங்கள் உள்ளன.
ஒரு தேசத்தை அரசாங்கத்தால் மட்டும் கட்டமைக்க முடியாது. அழகான சாலைகள், விமான நிலையங்கள், ராணுவம் இருப்பது மட்டுமே தேசம் கிடையாது. தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பும் நாட்டில்பல்வேறு துறைகளும் நவீன மாற்றங்களை அடைந்து வருகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி இருக்கிறது. பெண்கள் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். பல குடும்பங்களில் அதிகார மையமாக பெண்கள் திகழ்கின்றனர்.
கரோனா பேரிடர் காலத்தில், பல நாடுகள் தடுப்பூசியை வர்த்தகரீதியாக ஏற்றுமதி செய்தபோது, இந்தியா சேவை மனப்பான்மையுடன் 150 நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கியது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகங்களின் துணைச் செயலர்பிரசன்னா ராமசாமி, பனராஸ் பல்கலை. உதவிப் பேராசிரியர்கள்டி.ஜெகதீசன், எஸ்.விக்னேஷ்ஆனந்த், விஎல்சிடிஆர்சி தன்னார்வ நிறுவனத் தலைவர் டி.வசந்தா லட்சுமி, கர்நாடக இசைக் கலைஞர் ஷோபா ராஜு பங்கேற்றனர்.