அமெரிக்காவின் தெற்கு மாநிலமான டெக்சாஸில் உள்ள பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் காயமடைந்தார். சுமார் 18,000 பசுக்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கின்றனர். பண்ணையில் சிக்கியிருந்த ஒரு பணியாளரைத் தீவிர போராட்டத்துக்குப்பிறகு மீட்டு லுபாக் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
“பண்ணையில் அதிகளவு எருவை சேமித்து வைத்திருந்திருக்கலாம். அதனால் இந்த விபத்து நடந்திருக்கலாம். இந்த சோகத்திற்கான காரணம் மற்றும் உண்மைகளை அறிந்தவுடன், பொதுமக்களுக்கு முழுமையாகத் தெரிவிக்கப்படும். அதன்மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்களைத் தவிர்க்கலாம்.” என தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.
மாட்டு சாணத்தை உறுஞ்சும் இயந்திரத்தில் வெளியான அதிக வெப்பம் காரணமாக, பண்ணையில் இருந்த மீத்தேன் வாயு பற்றி எரிந்து விபத்து நேர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. டெக்ஸாஸ் விவசாய ஆணையர் சிட் மில்லர் அறிக்கையில்,” டெக்ஸாஸ் வரலாற்றில் கால்நடைகளுக்கு ஏற்பட்ட கொடிய தீ விபத்து இதுவாகும், விசாரணை செய்வதற்கும் மற்றும் அந்தப் பகுதியைச் சுத்தம் செய்வதற்குச் சிறிது காலம் ஆகலாம்” என்று தெரிவித்தார்.