புதுச்சேரி: பிரதமரின் பசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறிய மாநிலங்கள் பிரிவில் புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கடந்த 2016-17-ம் ஆண்டு முதல் 2022-23 வரை, விவசாயிகளின் நலனிற்காக, மத்திய அரசின் ”பிரதமரின் பசல் பீமா யோஜனா” என்றழைக்கப்படும் பயிர் காப்பீட்டு திட்டத்தினை செம்மையாக செயல்படுத்தி வருகின்றது. இதுவரை, சுமார் 72,000 விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு, அதில் இயற்கைப் பேரிடர்கள் மற்றும் மகசூல் பாதிப்பு போன்ற காரணங்களால் பாதிப்பு அடைந்தோர்க்கு சுமார் 25,000 விவசாயிகளுக்கு இது வரை சுமார் ரூ.29 கோடி அளவுக்கு காப்பீட்டு இழப்பாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்.14 (இன்று) மற்றும் ஏப்.15 (நாளை) சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் நகரில் எதிர்வரும் 2023 காரிப் பருவத்தில் ஆரம்பித்து 2025-26-ம் ஆண்டு ரபி பருவம் முடிய உள்ள காலத்துக்கு காப்பீடு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்த நடைமுறைகள் மற்றும் இழப்பீடுகளை வரையறுத்தல் போன்றவற்றை மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து இறுதி செய்திட ஒன்பதாவது தேசிய கூட்டம் நடைபெற்று வருகின்றது.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் செயலர் மனோஜ் அகுஜா, சத்தீஸ்கர் மாநிலத்தின் வேளாண் உற்பத்தி செயலர் டாக்டர் கமல் பிரீத் சிங் மற்றும் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் முதன்மை தலைமை செயல் அதிகாரி ரித்தீஷ் சவுகான் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்துக்கு சிறிய மாநிலங்களுக்குண்டான பிரிவில், பயிர் காப்பீட்டினை சிறப்பாக செயல்படுத்தியற்காக முதல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் வேளாண் துறையின் சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட இணை வேளாண் இயக்குநர் மற்றும் பயிர் காப்பீடு திட்ட முதன்மை அதிகாரி ஜாகிர் ஹுசைன் பரிசினை பெற்றுக் கொண்டார்.