புதுடில்லி : ”மியான்மரில் அமைதி ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகம் மீண்டும் திரும்ப வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது,” என நம் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு ஆசியநாடான மியான்மரில் 2021ல்ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின்ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
அப்போதிருந்தே ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மீதுமியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
சமீபத்தில் சகாயிங் பிராந்தியத்தின் கன்பாலு நகரில் உள்ள கிராமம் ஒன்றில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள், பேரணி நடத்த கூடியிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது மியான்மர் ராணுவம் வான்வழித்தாக்குதல் நடத்தியது.
இதில் குழந்தைகள் உட்பட 130 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா., சபை கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் புதுடில்லியில் நேற்று, நம் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சகாயிங் பிராந்தியத்தில் மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்திய செய்திகளை பார்த்தோம். இது கவலை அளிக்கிறது.மியான்மரின் அண்டை நாடு என்ற முறையில் வன்முறையை நிறுத்தும்படியும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காணும்படியும் கேட்கிறோம்.
அங்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகம் மீண்டும் திரும்ப வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.