ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் உள்ள லோஹாய்-மல்ஹர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சீரத் நாஸ். இவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் பள்ளி கட்டித்தர கோரிக்கை முன்வைக்கும் வீடியோ ஜம்மு – காஷ்மீரின் ‘மார்மிக் நியூஸ்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் சிறுமி ஒவ்வொரு இடத்தையும் குறிப்பிட்டு அதை விளக்குகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்தச் சிறுமி வீடியோவில்,” மோடி-ஜி, நான் இங்கு அரசுப் பள்ளியில் படித்து வருகிறேன். தயவுசெய்து எங்களுக்கு ஒரு நல்ல பள்ளியைக் கட்டித் தாருங்கள். தரை எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்று பாருங்கள். எங்களை இங்கேதான் உட்கார வைக்கிறார்கள். இருங்கள்… எங்கள் பள்ளி இருக்கும் பெரிய கட்டடத்தை உங்களுக்குக் காட்டுகிறேன். இந்த கட்டிடம் கடந்த 5 வருடங்களாக எவ்வளவு அழுக்காக இருக்கிறது எனப் பாருங்கள். இதுதான் எங்கள் வகுப்பறை பாருங்கள்… எவ்வளவு தூசியாக இருக்கிறது. எனவே எங்களுக்காக ஒரு நல்ல பள்ளியை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எங்களுக்கு உட்கார பெஞ்சு-கள்கூட இல்லை. அதனால் நாங்கள் தரையில் உட்கார வேண்டியிருக்கிறது. தரையில் உட்கார்ந்தால் எங்கள் சீருடைகள் அழுக்காகின்றன. சீருடை அழுக்காகிவிட்டல் அம்மா எங்களை அடிக்கிறார். தயவுசெய்து மோடி-ஜி, பள்ளியின் உள்கட்டமைப்பை அழகாகக் கட்டிக் கொடுங்கள் என நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இது தான் நாங்கள் பயன்படுத்தும் கழிவறை… கழிவறை எவ்வளவு அழுக்காக இருக்கிறது பாருங்கள் – அதுவும் உடைந்திருக்கிறது. மோடி ஜி, நீங்கள் எல்லோருடைய பேச்சையும் கேட்கிறீர்கள்.
தயவுசெய்து நான் சொல்வதையும் கேளுங்கள், எங்களுக்கு ஒரு நல்ல பள்ளியைக் கட்டித்தாருங்கள். நல்ல பள்ளி இருந்தால் நாங்கள் தரையில் உட்காரலாம். அதனால் என் சீருடை அழுக்காகாது. அம்மா என்னைத் திட்டமாட்டார். அதனால் நன்றாகப் படிக்கலாம். தயவுசெய்து எங்களுக்கு ஒரு நல்ல பள்ளியைக் கட்டித் தாருங்கள்” என விளக்கும் காட்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ கிட்டத்தட்ட 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து பகிரப்பட்டு வருகிறது.