சர்ச்சைக்கு ஆளான தனது ரஃபேல் வாட்ச் பில்லை இன்று ஏப்.14 அன்று வெளியிடுவேன் என்று அறிவித்திருந்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அத்துடன் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று முன்னதாக தெரிவித்திருந்தார். அதனை ஒருநாள் முன்னதாக நேற்று உறுதியும் செய்திருந்தார் அண்ணாமலை. இதனால் அரசியல் களத்தில் எழுந்த எதிர்பார்ப்புகளை, சமூக ஊடக தளங்கள் எதிரொலித்தும் வருகின்றன.
இதையடுத்து, DMKFiles என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், திமுக தொடர்பான முக்கிய கோப்புகள் இன்று 10.15 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னையில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
திமுகவின் ஊழல், சொத்து பட்டியலை வெளியிடுவதாக கூறிய நிலையில், அண்ணாமலை பேசி வருகிறார். அப்போது, தனது ரஃபேல் வாட்ச் பில்லை காண்பித்தார். ரஃபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். எனது வங்கி கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்தும் விவரங்களையும் வெளியிடுகிறேன் என தெரிவித்தார். வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் தருகிறார்கள் எனவும் தெரிவித்து, திமுக தொடர்பான முக்கிய கோப்புகள் குறித்து பேசி வருகிறார்.
உலகத்தில் மொத்தம் 500 வாட்ச்கள் மட்டுமே உள்ளது. இது 147-வது வாட்ச் ஆகும். ரஃபேல் விமானம் எப்படி இருக்குமோ அதே போல தான் இந்த வாட்ச் இருக்கும். இரண்டு வாட்ச்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளது. இந்த வாட்சை நீங்கள் சாதாரணமாகக் கட்ட முடியாது. ஒரு செங்கல் போல இந்த வாட்ச் கனமாக இருக்கும். மும்பையில் எம்என்சி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மற்றொருவர் இந்த வாட்சை வைத்துள்ளார்.நான் இந்த வாட்சை 2021-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரூ.3 லட்சத்திற்கு வாங்கினேன். இந்த வாட்சை யாரும் இனிமேல் வாங்க முடியாது. ஏனென்றால் இந்த வாட்ச் மார்க்கெட்டில் இல்லை” என்று தெரிவித்தார்.