சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், ஆணையம் கேட்டுக் கொண்டதால்தான் 6 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் நடைபெற்ற விவாதம்:
ஜி.கே.மணி (பாமக): வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவப் படிப்பு, அண்ணா பல்கலை. மாணவர் சேர்க்கையில் வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி முதல்வராக இருந்தபோது 20 சதவீத இடஒதுக்கீடு முறையாகச் செயல்படுத்தப்பட்டது. ஆனால், 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அவசரம் அவசரமாகக் கொண்டுவந்ததால்தான், உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. திமுக அரசு பொறுப்பேற்றதும் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முயற்சித்தோம். உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தோம்.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில்தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் கேட்டுக் கொண்டதால்தான் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளோம்.
ஜி.கே.மணி: இந்தப் பிரச்சினைக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வுகாண வேண்டும்.
தி.வேல்முருகன் (தவாக): வன்னியர் மக்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைக்க திமுகதான் காரணம். நான் இருந்த கட்சியும், தற்போது இருக்கும் கட்சியும் தொடங்குவதற்கு முன்னர், ஒட்டுமொத்த வன்னியர்களும் திமுகவைத்தான் ஆதரித்தனர்.
இவ்வாறு வேல்முருகன் பேசியதற்கு, அதிமுகவின் கே.பி.முனுசாமி எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதையடுத்து, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு, அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அவை முன்னவர் துரைமுருகன்: அவசரகதியில் எதையும் மேற்கொள்ளாமல், சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் 6 மாதங்கள் அவகாசம் கொடுத்துள்ளோம்.
தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
கே.பி.முனுசாமி (அதிமுக): இது உணர்வுப்பூர்வமானப் பிரச்சினை. வேளாண் அமைச்சர் மற்றும் வேல்முருகன் பேசியதை நீக்க வேண்டும்.
அவை முன்னவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கருத்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால், வேல்முருகன் எந்தக் கட்சியையும், யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் தாராளமாக நீக்கலாம்.
கே.பி.முனுசாமி: வன்னியர் சமூகம் முழுவதுமே ஒரு இயக்கத்துக்குத்தான் ஆதரவாக இருக்கிறது என்று வேல்முருகன் கூறுவதை ஏற்க முடியாது.
பேரவைத் தலைவர்: ஒருவர் தனக்குப் பின்னால் ஒரு சமூகமே இருக்கிறது என்று கூறினால், அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க மாட்டோம்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): வன்னியர் மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது நீங்கள்தான் (திமுக). ஆனால், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர்கள் யார் என்பது நாட்டுக்குத் தெரியும் என்று ராமதாஸ் (பாமக) தெரிவித்துள்ளார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக) ஆகியோர் பேசினர்.