\"வாடகை மட்டும் ரூ 3.75 லட்சம்… மாசமாசம் யார் தராங்க கேளுங்க..\" அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி

சென்னை: பாஜகவின் அண்ணாமலை இன்று திமுகவினர் மீது பல புகார்களை முன்வைத்த நிலையில், அண்ணாமலை குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் என்று கூறி ஒரு எக்ஸல் சீட்டை வெளியிட்டார்.

அதில் பல திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு என்று கூறி பல கருத்துகள் இடம் பெற்றிருந்தது. இதற்கு திமுக சார்பிலும் பதிலடி அளிக்கப்பட்டது. ஆதாரமே இல்லாமல் அண்ணாமலை ஏதேதோ சொல்லி வருவதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜி: இதனிடையே அண்ணாமலை குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் செந்தில் பாலாஜி செய்தியாளரைச் சந்தித்தார். அண்ணாமலை வெளியிட்ட ரபேல் வாட்ச் பில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று கூறிய அவர், அரிதான வாட்சை 4 லட்சத்திற்கு வாங்கி, யாராவது ஒரே மாதத்தில் மூன்று லட்சத்திற்கு விற்பார்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அண்ணாமலை வீட்டு வாடகை மட்டும் மூன்றே முக்கால் லட்சம் என்று குறிப்பிட்ட அவர், அவருக்கு மாதாமாதம் யார் வீட்டு வாடகை யார் தருகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் “மனசாட்சி உள்ள யாரும் அவர் வெளியிட்டதை பில் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வாட்ச் வாங்கியவர் ரூ 4.5 லட்சத்திற்கு வாங்கினாராம். 2, 3 மாதங்களில் இவருக்கு ரூ 3 லட்சத்திற்கு விற்கிறார்களாம். அது நாட்டிலேயே கிடைக்காது அரிய பொருள் என்கிறார்கள். அப்படிப்பட்ட அரிய பொருட்களின் விலை காலம் செல்ல செல்ல அதிகரிக்கவே செய்யும். இங்கு மட்டும் எப்படி இரு மாதங்களில் விலையைக் குறைத்துக் கொடுக்க முடியும்.

வாட்ச் பில்: மேலும், முன்பு 149ஆவது வாட்ச் என்கிறார் ஒன்றில் 147 என்கிறார். அவர் வெளியிட்ட பில்லிலும் பல பிரச்சினைகள் இருப்பதாகப் பலரும் கூறுகின்றனர். ஒரு பொய்யை மறைக்க, அதாவது தான் வாங்கிய ஒரு லட்சத்தை மறைக்க 1000 பொய்களைக் கூறி வருகிறார். எனக்கு கிப்ட்டாக வந்தது ஏன் ஒப்புக்கொள்வதில் அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்பார்கள் என்பதால்.. ஏதோ தேர்தலுக்கு முன்பு அவர் வாங்கினார். அதன் பின்னர் அவரிடம் இருந்து தான் வாங்கினேன் என்று கூறி வருகிறார். நடுவே இரண்டு மாதங்கள் என்ன செய்தார். அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளில் என்ன முகாந்திரம் இருந்தது. அதில் என்ன இருந்தது. அமைச்சர்கள் மீது அவர் சொல்லிய குற்றச்சாட்டுகளில் என்ன முகாந்திரம் இருந்தது. ஏதாவது ஒரு முகாந்திரம் அல்லது அடிப்படை ஆதாரம் இருக்கிறதா.

DMk Senthil Balaji questions about Annamalai allegations on DMK leader

வாடகை 3.75 லட்சம்: நீங்கள் சொன்ன நபர் குடியிருக்கும் வீட்டின் மாத வாடகை மட்டும் ரூ.3.75 லட்சம் ஆகும்.. இந்த வாடகையை யார் தருகிறார்கள். வாகனத்துக்கு டீசல் அடிப்பது யார்? உதவியாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பது யார்? வீட்டைப் பராமரிக்க எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்குச் சம்பளம் யார் கொடுக்கிறார்கள்? வெறும் 3 ஆட்டை மேய்த்தால் 3.75 லட்சம் வாடகை கொடுத்துக் குடியிருக்க முடியுமா… சென்னையில் அவர் குடியிருக்கும் வீட்டின் வாடகையைப் பார்த்தால் புரியும்.

படையப்பா படத்தில் மாப்பிள்ளை அவர் தான் என்று வசனம் வரும்.. அதேபோல பயன்படுத்துபவர் இவராம். வாடகை கொடுப்பவர் மற்றவர்களாம். இதுவே அரசியல்வாதிக்கு அசிங்கம் இல்லையா.. ஆதாரமே இல்லாமல் பொத்தம் பொதுவாக ஏதேசோ சொல்லி வருகிறார். கோமாளித்தனமாகப் பேசி வருகிறார்.. அவர் தேசிய கட்சியில் இருந்தாலும்.. இப்படிப் பேசி வருகிறார்.. இதையெல்லாம் விட்டுவிட்டு தமிழக அவர்கள் கட்சியை வளர்க்கத் தேவையான வேலைகளைச் செய்யலாம்.

சரமாரி கேள்வி: நாங்கள் தேர்தலில் போட்டியிடும் போதே, எங்கள் சொத்து தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துள்ளோம். என்னைப் பற்றியும் அதில் சில தகவல்கள் இருந்ததாகச் சொன்னார்கள். முதல்வரிடம் அனுமதி பெற்று நானே அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன். அவர் சொன்னதில் எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஒரு வாட்சுக்கு பில் கொடுக்க முடியாமல் ரசீது என்ற பெயரில் ஏதேதோ சொல்லி வருகிறார்” என்று சரமாரியாகச் சாடி வருகிறார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.