இந்தூர்:
மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு 11 வயதே ஆன ஒரு சிறுவனை, மதம் சார்ந்த கோஷத்தை போட சொல்லி சில குரூரர்கள் ஆடைகளை அவிழ்த்தும், சரமாரியாக தாக்கியும் அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தற்போது அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
நாட்டில் சமீபகாலமாக மத ரீதியிலான வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருவதை காண முடிகிறது. குறிப்பாக, இஸ்லாம் மதத்தை குறி வைத்து இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளும், பிரச்சாரங்களும் செய்யப்படுகின்றன. “முஸ்லிம்களை இந்தியாவில் இருந்தே விரட்ட வேண்டும்”, “முஸ்லிம்களை ஒழிக்க வேண்டும்” என்பன போன்ற மோசமான கருத்துகளை அரசியல்வாதிகளே கூறுவதை பார்க்க முடிகிறது.
இது ஒருபுறம் இருக்க, மாற்று மதங்களை சேர்ந்தவர்களை மத ரீதியிலான கோஷத்தை எழுப்புமாறு வலியறுத்தி அடித்து உதைத்த நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இதில் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.
அப்படியொரு கொடூர சம்பவம்தான் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன், அங்குள்ள ஒரு மைதானத்தில் நேற்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு 5 சிறுவர்கள் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 16 முதல் 18 வயதுதான் இருக்கும். இதையடுத்து, அந்த சிறுவனை அருகில் அழைத்த அவர்கள், ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கூறுமாறு கேட்டனர். ஆனால், அந்த சிறுவன் அவ்வாறு கூற மறுத்தான்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அந்த சிறுவனை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், அவனது ஆடைகளை அவிழ்க்குமாறும் கூறினர். அதற்கு அந்த சிறுவன் மறுக்கவே, அந்த சிறுவர்கள் அவனை கொடூரமாக தாக்கினர். “அண்ணா.. என்னை விட்ருங்க.. என்னை விட்டுருங்க..” என அந்த சிறுவன் கெஞ்சிய போதும் அவர்கள் விடவில்லை. கடைசியாக, அடி தாங்க முடியாமல் அந்த சிறுவன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டான்.
இந்நிலையில், தாங்கள் இவ்வாறு செய்ததை, அந்த சிறுவர்களே வீடியோ எடுத்து தங்கள் நண்பர்களுக்கு அனுப்ப, அது அப்படியே மற்றவர்களுக்கும் பரவியது. இந்த வீடியோ பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 18 வயதை கூட தாண்டாத சிறுவர்கள் மனதில், இப்படியொரு வெறுப்புணர்வு கலந்திருப்பது அனைவரையும் கலக்கமடையச் செய்தது. பின்னர் இதுதொடர்பான புகாரின் பேரில், அந்த 5 சிறுவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.