புதுடில்லி : மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமுன்னாள் அமைச்சர்ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்ல உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி மறுத்துள்ளது.
தமிழகத்தின் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்தது.
இதற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தமிழக போலீசார் கர்நாடகாவில் கைது செய்தனர். இதற்கிடையே பல்வேறு நிபந்தனைகளுடன் இவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.எம்.ஜோசப் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை முடிக்க ஆறு மாதங்களாகும்’ என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விரைவாக விசாரணை நடத்த அறிவுறுத்திய நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்காக விதிக்கப்பட்ட தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர்.
அப்போது ‘ஜாமின் நிபந்தனைகளை முழுமையாக தளர்த்த வேண்டும்; அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் ‘வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டுமானால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெறலாம்’ எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Advertisement