கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நகரத்தில் மெடிக்கல் காலேஜ், சாக்கோ, பாப்பனங்கோடு, வஞ்சியூர் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் கொள்ளைகள் நடந்து வந்தன. போலீஸாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது வெள்ளையாணி பகுதியில் ஒருவர் ஸ்பைடர்மேன் வேடத்தில் பைக்கில் செல்வதும். அவர் பைக்கை ஓரிடத்தில் மறைவாக வைத்துக்கொண்டு கொள்ளையடிக்கச் செல்வதும். சிறிது நேரத்தில் கொள்ளையடித்த பொருள்களுடன் திரும்ப வந்து பைக்கை எடுத்துக்கொண்டு திரும்பி செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அவரது உருவ அமைப்பை வைத்து 200 கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஸ்பைடர்மேன் பாகுலேயன் என்பதை போலீஸார் அறிந்துகொண்டனர்.
இதையடுத்து கொள்ளையனை பொறிவைத்து பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். இரவு நேரத்தில் திருவனந்தபுரம் நகரத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை கண்காணித்தது போலீஸ். வெள்ளையாணி பகுதியில் ஸ்பைடர்மேன் பாகுலேயன் பைக்கில் சென்று ஓரிடத்தில் அதை பார்க் செய்வதை போலீஸார் கண்காணித்தனர். அவரின் பைக் இருந்த பகுதியில் வஞ்சியூர் போலீஸார் மப்டியில் மறைந்து இருந்தனர். கொள்ளையடித்துவிட்டு திரும்பி வந்து பைக்கை எடுக்க வந்த ஸ்பைடர்மேன் பாகுலேயனை போலீஸார் அமுக்கிப்பிடித்தனர்.
இறுக்கமான பனியன், தலையில் மங்கி குல்லா, முகத்தில் துணிவைத்து கட்டி ஸ்பைடர்மேன் போன்று கொள்ளையடிக்கச் செல்வதால் கொள்ளையன் பாகுலேயனின் பெயரோடு ஸ்பைடர்மேன் என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது. மற்ற கொள்ளையர்களைப்போன்று இவர் கதவு, ஜன்னலை உடைத்து கொள்ளையடிப்பதில்லை. ஸ்பைடர்மேன் போன்று சுவர்களில் ஏறி வெண்டிலேஷன்களில் கம்பிகளை வளைத்து சிறிய துவாரம் வழியாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளையை அரங்கேற்றிவிடுவான். இவர் கொள்ளையடிக்கப் போகும்போது ஒருவேளை வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தாலும் அந்த வழியாக கொள்ளையடிக்கச் செல்லமாட்டார். சுவரில் ஏறிச்சென்று சிறிய வெண்டிலேஷன் வழியாக நுழைவதுதான் அவரது பாணி.
இவர் கேரளாவில் கொள்ளையடித்துவிட்டு தமிழ்நாட்டின் மதுரையில் ஒரு வீடு எடுத்து சொகுசாக வாழ்ந்துவிட்டு, பணம் தீர்ந்ததும் மீண்டும் கொள்ளையடிக்கச் செல்வது வழக்கம். கேரளாவின் 14 மாவட்டங்களிலும் சேர்த்து 200-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் ஸ்பைடர்மேன் பாகுலேயன் மீது உள்ளது. ஏற்கனவே கொள்ளை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர், கடந்த இரண்டு மாதங்களாக திருவனந்தபுரத்தில் மட்டும் 12 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.