நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார்இசை: ஜி.வி. பிரகாஷ், சாம் சி.எஸ்இயக்கம்: கதிரேசன்
சென்னை: காஞ்சனா 3 படத்துக்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் 3 ஆண்டுகள் கழித்து வெளியாகி உள்ள ருத்ரன் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டத்தை வரவழைத்து இருக்கிறது.
தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தை தயாரித்து இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார்.
பாட்டு வேணுமா பாட்டு இருக்கு, ஆக்ஷன் வேணுமா ஆக்ஷன் இருக்கு, சென்டிமென்ட் வேணுமா அதுவும் இருக்கு, கருத்து இருக்கு என ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் பேக்கேஜாக வந்துள்ள இந்த படத்தில் எதெல்லாம் இருக்கு? எதெல்லாம் மிஸ்ஸிங் என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
ருத்ரன் கதை: நண்பனுக்காக 6 கோடி ரூபாய் கடன் வாங்கும் ராகவா லாரன்ஸின் அப்பா நாசரை அவரது நண்பர் ஏமாற்றி விட்டு எஸ்கேப் ஆகிறார். கடனை திருப்பி அடைக்க முடியாத சோகத்தில் நாசர் உயிரை துறக்கிறார். அப்பா வாங்கிய கடனை கேட்டு கடனை கொடுத்தவர் தொல்லை செய்கின்றனர்.
அந்த கடனை அடைக்க வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று திரும்பும் போது அவரது குடும்பமே சிதைந்து போய் கிடக்கிறது. அம்மா பூர்ணிமா பாக்கியராஜும் உயிர் இழக்கிறார். காதலித்து திருமணம் செய்த மனைவி பிரியா பவானி சங்கரையும் காணவில்லை. இதற்கும் வில்லன் (பூமி) சரத்குமாருக்கும் என்ன சம்பந்தம், ராகவா லாரன்ஸ் என்ன செய்தார் என்பது தான் ருத்ரன் படத்தின் கதை.
நல்ல மெசேஜ்: அம்மா, அப்பாவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற நல்லதொரு கருத்தை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த படத்தை கதிரேசன் இயக்கி உள்ளார். ஆனால், மற்றபடி படத்தின் ஸ்க்ரீன் பிளேவில் பெரியளவில் அவர் கோட்டை விட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
பார்த்து பார்த்து புளித்துப் போன அதே பழைய பழி வாங்கும் கதை டெம்பிளேட்டாகவே இந்த படம் நகர்கிறது. பாலைய்யா படங்களில் வருவதை போலவே சண்டைக் காட்சிகள் மாஸாக இருக்க வேண்டும் என எடுக்கப்பட்டாலும் தாமாஸாகவே முடிகிறது. லாரி ராடு நசுங்குறது எல்லாம் ரொம்பவே ஓவர்.
ஓவர் பில்டப்: நான் பூமிடான்னு சரத்குமார் பஞ்ச் பேசுவதும், அந்த பூமியையே படைச்சவன் டா.. ருத்ரன் டா என ராகவா பேசுவதும் ஓவர் பில்டப் ஆக இருக்கிறது. சரத்குமார் பெரிய வில்லனாக பலரை அடிக்கும் காட்சிகளும், சரத்குமார் ஆட்களையும் அவரையும் ராகவா லாரன்ஸ் போட்டு அடிக்கும் காட்சிகள் என்று ஸ்டன்ட் மாஸ்டர் மட்டுமே படத்துக்காக கடும் உழைப்பை போட்டிருப்பது தெரிய வருகிறது.
ஆனால், ரசிகர்களுக்கு அந்த சண்டைக் காட்சிகள் எந்தளவுக்கு கனெக்ட் ஆகிறது. சென்டிமென்ட் எப்படி ஒர்க்கவுட் ஆகும் என்பதை புரிந்து கொண்டு இந்த படத்தை இயக்குநர் கொடுக்கவில்லை என்கிற குறை எழத்தான் செய்கிறது. கமர்ஷியலாக ஒரு படத்தை கொடுத்து விட்டால் போதும், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என போட்டுக் கொள்ளலாம் என நினைத்து பல இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் இதே தப்பை திரும்ப திரும்ப செய்து வருகின்றனர்.
பிளஸ்: காமெடி, நடனம், ரொமான்ஸ், ஆக்ஷன் என ராகவா லாரன்ஸ் கலக்குகிறார். அம்மாவாக நடித்துள்ள பூர்ணிமா பாக்கியராஜ் அவரது எக்ஸ்பீரியன்ஸை திரையில் காட்டுகிறார். பத்து தல படத்தை விட பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். பின்னணி இசை மற்றும் 3 பாடல்கள் ரசிகர்களை தியேட்டரில் உற்சாகப்படுத்துகிறது.
மைனஸ்: தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குநராக பல இடங்களில் ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பது திரையில் பளிச்சென தெரிகிறது. பழைய டெம்பிளேட் திரைக்கதை, காதல், காமெடி மற்றும் ஆக்ஷன் என புதுசா எந்தவொரு விஷயமும் ரசிகர்களுக்கு கொடுக்காதது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது. ஆக்ஷன் விரும்பிகள் இந்த படத்தை ஒரு முறை தியேட்டரில் சென்று பார்க்கலாம். சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா 2 படங்கள் மூலம் ராகவாஅ லாரன்ஸ் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்!