சென்னை: போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகைகளுக்கான வட்டியை 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 1 ஆம் தேதியில் இருந்து இது அமலுக்கு வந்துள்ளது.
சிறு துளி பெருவெள்ளம் என்பது பழமொழி… சிறுக சிறுக நாம் சேமிக்கும் தொகை கண்டிப்பாக ஒருநாள் பயனளிக்கும். இக்கட்டான சூழலில் நமக்கு கை கொடுத்து உதவுவது இந்த சிறு சேமிப்புகளாகத்தான் இருக்கும். சேமிப்பின் பயன் அறிந்து பள்ளி பருவத்தில் இருந்தே நமக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் சேமிப்பு பழக்கத்தை பற்றி சொல்லுவதுண்டு…
எதிர்பாராத நிகழ்வுகளின் போது யாரிடம் போய் உதவி கேட்பது என தத்தளித்துக் கொண்டு இருக்கும் போது இதுபோன்ற சேமிப்புகளே பெரும் பயனாக இருக்கும். எனவே பலரும் ஏதாவது ஒரு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதுண்டு. மத்திய அரசின் அஞ்சலக துறையும் தற்போது பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த சிறுசேமிப்புகளுக்கு வட்டியும் கொடுக்கப்படுவதால் மக்கள் பலரும் ஆர்வமுடன் இந்த சிறுசேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிப்பதை காணமுடிகிறது. அந்த வகையில் அஞ்சலக சேமிப்பு திட்டம் ஒன்றில் நாம் 5 ஆண்டுகள் பணத்தை சேமிக்கும் பட்சத்தில் ரூ.2,50,000 வட்டியாக கிடைக்கும் நிலை உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவிகிதமாக உயர்த்தியது.
இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தின் கீழ் தற்போது வட்டியாக ரூ.2.50 லட்சம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த திட்டம் பற்றிய விவரங்களை பார்க்கலாம். உத்தரவாதமான வருமானம் மற்றும் ரிஸ்க் குறைந்த சேமிப்புகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்பும் மக்களுக்கு முதலில் வருவது அஞ்சலக டைம் டெபாசிட் திட்டங்களாகத்தான் இருக்கும். இந்த போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டங்களில் ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையில் சேமிப்புகளை தொடர முடியும்.
சேமிப்பு திட்டம் முதிர்வடைந்த பிறகு வட்டித்தொகையுடன் பணத்தை நாம் எடுத்துக்கொள்ள முடியும். முதிர்வடைந்த பிறகு மீண்டும் கூட டைம் டெபாசிட்டை கூடுதல் ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்க குறைந்தபட்ச வைப்புத்தொகையாக ரூ.1,000 செலுத்த வேண்டும். அதன்பிறகு கூடுதலாக எவ்வளவு வேண்டும் என்றாலும் டெபாசிட் செய்து கொள்ள முடியும்.
போஸ்ட் ஆஃபிஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கான தகுதிகள்:
* 18-வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள்.
* மைனர்களுக்கு பெற்றோர்கள் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்.
* மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கார்டியன் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்.
* 18-வயதுக்கு மேற்பட்டவர்கள் மூன்று பேர் சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் ஆக ஓபன் செய்யலாம்.
டைம் டெபாசிட்டில் கிடைக்கும் வட்டி: 5 ஆண்டு கால டைம் டெபாசிட் திட்டத்தின் கீழ் ஒருவர் 6 லட்ச ரூபாய் முதலீடு செய்தால், 7.5 % வட்டி விகிதத்தில் அவருக்கு ரூ.2,69,000 வட்டியாக கிடைக்கும். முதிர்வு காலத்தில் அசலுடன் சேர்த்து ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்து 969 ரூபாய் பயனர்களுக்கு கிடக்கும்.