கர்த்தூம்: சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.
சூடான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாது ராணுவத்தின் ஒரு பிரிவான பலம் பொருந்திய துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் (Rapid Support Forces) என்ற பிரிவும் ராணுவ ஆட்சிக்கு எதிராக இயங்கிவந்தது.
இந்நிலையில், சூடான் நாட்டின் கர்த்தூம் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக துணை ராணுவப் படை தெரிவித்துள்ளது. இதனையடுத்து சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிலவி வருகிறது. நாடு முழுவதும் கலவரம் பரவத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ராணுவம் நாட்டைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
மோதல் பின்னணி: வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடான சூடானில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் டார்ஃபூர் மாகாணத்தை மையமாக கொண்டு உள்நாட்டு போர் நிலவி வந்தது. இந்த நிலையில் 2019-ம் ஆண்டு அந்த நாட்டின் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டது. இதன்பின் புதிய அரசை அமைப்பதற்கான ஜனநாயக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ராணுவம் நாட்டைக் கைப்பற்றியது. இதனால் சூடான் ராணுவத்துக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியர்களுக்கு எச்சரிக்கை: இதற்கிடையே, சூடானில் உள்ள இந்திய துணை தூதரகம் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சூடானில் துப்பாக்கிச் சூடும், கலவரமும் நடப்பதால் அங்கிருக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வீட்டை விட்டு யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று உடனடியாக அறிவுறுத்தப்படுகிறார்கள். அமைதியாக இருங்கள். அடுத்த தகவலுக்கு காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளது.
NOTICE TO ALL INDIANS
IN VIEW OF REPORTED FIRINGS AND CLASHES, ALL INDIANS ARE ADVISED TO TAKE UTMOST PRECAUTIONS, STAY INDOORS AND STOP VENTURING OUTSIDE WITH IMMEDIATE EFFECT. PLEASE ALSO STAY CALM AND WAIT FOR UPDATES.