சென்னை: கிருஷ்ணகிரி ஆணவக் கொலை சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அமமுக தலைவர் டிடிவி தினகரன் இந்த விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் சுபாஷ் என்பவர் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுஷா என்பவரைக் காதலித்து வந்துள்ள நிலையில், இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இதனால் தனது மகனின் காதலை சுபாஷ் ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு வேறு சமூகம் என்பதால் காதலை விட்டுவிடும்படி தண்டபாணி மிரட்டியுள்ளார். இருப்பினும், அதைத் தாண்டி சுபாஷ் அனுஷாவை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். இதனால் தண்டபாணி கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
ஆணவக் கொலை: திருமணத்திற்குப் பின் சுபாஷ் மனைவி அனுஷாவுடன் திருப்பூரில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், நேற்று சொந்த ஊரான கிருஷ்ணகிரி அருணபதிக்கு சென்றுள்ளார். சுபாஷின் பாட்டி கண்ணம்மா வீட்டிற்குச் சென்றுள்ளனர். தண்டபாணிதான் தனது தாய் மூலம் அவர்களை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். தனது மகனுக்குக் கோபம் போய்விட்டதாக நினைத்து பாட்டி கண்ணம்மாவும் சுபாஷை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இருப்பினும், தண்டபாணி அதிகாலை நேரத்தில் அங்கே சென்று தனது சொந்த மகன் சுபாஷை சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த அனுஷா மற்றும் தண்டபாணியின் தாய் கண்ணம்மா ஆகியோரையும் கண்ணை மூட்டிக் கொண்டு வெட்டியுள்ளார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
டிடிவி தினகரன்: இந்த மிருக தனமான தாக்குதலில் சுபாஷ் மற்றும் தண்டபாணியின் தாயார் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். அனுஷா படுகாயத்துடன் அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த ஆணவக் கொலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள அமமுக தலைவர் டிடிவி தினகரன், தமிழக அரசையும் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “தருமபுரி அருகே தந்தையே மகனை ஆணவ படுகொலை செய்ததாகவும், மருமகளைக் கொடூரமாகத் தாக்கியதாகவும் வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
தனிச்சட்டம் என்னாச்சு: தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்குள் இரண்டு ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கூறியதை முதல்வரான பின்னர் மறந்து விட்டாரோ என்று கருதத் தோன்றுகிறது.
தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டத்தைத் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தண்டபாணியை போலீசார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தது குறிப்பிடத்தக்கது.