மாட்ரிட்-ஸ்பெயினில், ஆய்வு ஒன்றுக்காக வெளி உலக தொடர்பின்றி 500 நாட்கள் குகைக்குள் வாழ்ந்த தடகள வீராங்கனை பியாட்ரிஸ் பிளாமினி வெளியே வந்ததை அடுத்து, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினைச் சேர்ந்த பியாட்ரிஸ் பிளாமினி, 50, தடகள வீராங்கனையாவார்.
உற்சாக வரவேற்பு
இவர் விஞ்ஞானிகளின் ஆய்வு ஒன்றுக்காக, 2021 நவம்பர் 20ல், ஸ்பெயினில் உள்ள கிரானாடா மலைப் பகுதியில், பூமிக்கடியில் 230 அடி ஆழத்தில் இருந்த குகைக்குள் சென்றார்.
இரண்டு கேமராக்கள், ஆயிரம் லிட்டர் தண்ணீர், 60 புத்தகங்களுடன் குகைக்குள் சென்ற இவர், 500 நாட்கள் இங்கு தங்கியிருந்தார்.
யாருடைய துணையும் இல்லாமல் குகைக்குள் வசித்த இவரின் ஒவ்வொரு அசைவையும், உளவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் கேமராக்கள் வழியே கண்காணித்து வந்தனர்.
கம்பளி பின்னுதல், ஓவியம் வரைதல் மற்றும் வலுவுடன் இருக்க உடற்பயிற்சி என நேரத்தை கழித்த பிளாமினி, சமீபத்தில் வெளியே வந்த போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாகச அனுபவம்
இந்த சாகச அனுபவம் குறித்து கூறிய பிளாமினி, ”குகைகள் மிகவும் பாதுகாப்பானவை. ஆனால், பகல் வெளிச்சம், மூளையின் செயல்பாடுகளுக்கு அவசியம் என்பதை, இருளில் இருந்த அங்கு உணர்ந்தேன். நேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. இது மிகச்சிறந்த அனுபவம்,” என்றார்.
தனிமையில் இருக்கும் நிலையில் மனித மூளையின் செயல்பாடு, உடல் மற்றும் மனரீதியான வலு ஆகியவற்றை பரிசோதிப்பதற்காக, பிளாமினியின் அனுபவத்தை கிரனாடா மற்றும் அல்மேரியா பல்கலைக்கழகங்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளன.
கடந்த 2010ல் தென் அமெரிக்காவின் சிலியில் உள்ள சான் ஜோஸ் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில், அதில் பணியாற்றிய 33 தொழிலாளர்கள், 2,257 அடி ஆழத்தில், 69 நாட்கள் தனிமையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.