வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
எங்கள் ஏரியாவில் குரங்குத் தொல்லை மிக அதிகம். பெரிய பெரிய குரங்குகள் தங்கள் குடும்பத்தோடு அடிக்கடி கூட்டமாக வந்து ஒரு காட்டு காட்டிவிட்டுப் போகும். அடுப்படிக்குள் நுழைந்து ஊறப்போட்ட அரிசி, உளுந்து, பட்டாணி என்று எல்லாவற்றையும் ஒரு விளாசு விளாசிவிடும். பப்பாளி, வாழை, கொய்யா என ஆசையாக வளர்க்கும் மரங்களின் பிஞ்சுகளைக் கூட விடாமல் பிடுங்கி எறிந்துவிடும். ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்க பயமாக இருக்கும். உள்ளே வந்துவிட்டால், விரட்டினால் நம்மை எதிர்க்கும்.
ஒரு முறை என் தோழி ஜானகி – கல்லூரியில் பேராசிரியையாக இருப்பவள் – புத்தம் புதிதாகக் காய்கறி, பழங்கள் , முட்டைகள் என வாங்கி வந்து டேபிளில் வைத்திருக்கிறாள். குரங்குகள் பற்றித் தெரியும் என்பதால் கதவு, ஜன்னல்களைச் சாத்திவிட்டுத்தான் கல்லூரிக்குக் கிளம்புவாள். அன்று கிளம்பும்போது கல்லூரியிலிருந்து பணி பற்றிய ஒரு ஃபோன் கால் வரவே, எல்லாக் கதவுகளையும் சாத்திய அவள், அடுப்படி ஜன்னலை மட்டும் சாத்த மறந்துவிட்டு கிளம்பியிருக்கிறாள்.
மாலையில் வீட்டைத் திறந்த அவளுக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி.
குரங்குகள் ஜன்னலில் தொற்றிக் கொண்டு, டேபிளில் இருந்த அத்தனையையும் இழுத்துப்போட்டுத் தின்று துவம்சம் செய்ததோடு, முட்டைகளை எடுத்து வீசியெறிந்து விளையாடிவிட்டுச் சென்று விட்டன. டேபிளில் இருந்த மோர்ப்பாத்திரம் கவிழ்ந்து அறை முழுவதும் உடைந்த முட்டைகளும் மோருமாக…. மயக்கமே வந்துவிட்டதாம் அவளுக்கு.சகிக்கமுடியாத வாடை வேறு.
அதைச் சுத்தம் செய்ய ஆள் அழைத்து, வேலைகளை முடிப்பதற்குள் இரவாகி விட்டதாம். அந்த சலிப்பில் அடுத்த நாள் விடுப்பு எடுத்துக் கொண்டாள்.
ஒரு சின்னக் கவனக் குறைவால், இவ்வளவு வேலையாகிப் போனது என அவள் எங்களிடம் கூறி வருந்தியபோது, நாங்கள் சிரித்துக் குமித்துவிட்டோம்.
அப்படி அவள் என்ன கூறினாள் தெரியுமா? இவ்வளவும் செய்த குரங்குகள், எங்கிருந்தோ மெடிக்கல் ஷாப்பிலிருந்து எடுத்து வந்த மருந்து டப்பாவை இவள் வீட்டு காம்ப்பவுண்ட்டுக்குள் போட்டுச் சென்றிருக்கின்றன.
அந்த டப்பா முழுவதும் பாராசிட்டமால் மாத்திரைகள்.
செய்வதையும் செய்துவிட்டு, தலைவலிக்கு மருந்தும் சென்று தந்த அந்தக் குரங்குகளை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது.
-கி.சரஸ்வதி,
ஈரோடு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.