புதுடெல்லி: இந்தியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் புதிதாக10,753 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 53,720 – ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,753 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,720 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. புதன் கிழமை10,158 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை,11,109 பேர் பாதிக்கப்பட்டு புதிய உச்சம் அடைந்தது. இந்த நிலையில் இன்று பாதிப்பு சற்றே குறைந்திருக்கிறது.
இதுவரை கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 211 ஆக உள்ளது.
கோவிட் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 091 ஆக அதிகரித்துள்ளது.