`தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு புதிய கட்டுப்பாடுகள்' – காவல்துறை ‘மூவ்’ பின்னணி

நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. அதைத்தொடர்ந்து, நாளை தமிழ்நாட்டில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெறவிருக்கிறது. பேரணியின் இறுதியில் பொதுக்கூட்டமும் நடத்தப்படவிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக

இந்தநிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு 12 நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை விதித்திருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

தமிழ்நாடு காவல்துறையின் 12 புதிய கட்டுப்பாடுகள்:

1. ஆர்.எஸ்.எஸ். பேரணியின் போது தனி நபர்களை குறிப்பிட்டோ சாதி, மதம் பற்றியோ எக்காரணம் கொண்டும் யாரும் தவறாகப் பேசக் கூடாது.

2. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்தவித கருத்துக்களையும் பேசக்கூடாது.

3. நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் யாரும் செய்யக்கூடாது.

4. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பேரணி மற்றும் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும்.

சைலேந்திரபாபு

5. ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்திச் செல்லக்கூடாது.

6. ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் குடிநீர் வசதி, முதல் உதவி, நடமாடும் கழிவறைகள், கேமராக்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொள்ள காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினருடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.

7. காவல்துறை அனுமதி அளித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே பேரணி செல்லவேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இடதுபுறமாக மட்டுமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே பேரணிக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

8. ஊர்வலத்தை நடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், ஊர்வலத்தில் செல்பவர்களை ஒழுங்குப்படுத்தவும் காவல்துறைக்கு உதவும் வகையில் போதுமான தன்னார்வலர்களை நியமித்திருக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

9. பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலி சத்தம் 15 வாட்ஸ்-களுக்கு மிகாமல் இருப்பது அவசியம். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது.

10. ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாசாரம் மற்றும் பிறகுழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

11. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.

12. இந்த நிபந்தனைகள் எதையும் ஊர்வலத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது. அப்படி மீறும் வகையில் செயல்பட்டால் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காவல்துறை கட்டுப்பாட்டுக்கான காரணங்கள் என்ன:

`ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது’ எனக்கூறிதான் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க கூடாது என தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் வாதிட்டுவந்தது. இதற்கு காரணம், மதப்பேரணிகள் மூலம் கலவரங்கள் ஏற்படுவதும், இரு குழுக்களிடையே மோதல்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக நடந்துவருவதுதான். குறிப்பாக, வட மாநிலங்களில் ராம நவமி ஊர்வலம், அனுமன் ஜெயந்தி ஊர்வலம் உள்ளிட்ட சில மதப்பேரணிகள் வன்முறையில்தான் முடிந்துவருகின்றன. கடந்த மாதம்கூட ராம நவமி ஊர்வலத்தின்போது பீகார், மேற்குவங்கம், மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களில் இரு மதப்பிரிவினர்களிடையே மோதல்வெடித்து அந்த மாநிலங்களின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்தது. அந்த நிலைமை தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து அனுமதி மறுத்துவந்தது’ என்கிறார்கள் ஆளும்தரப்பினர்.

ராம நவமி கலவரம்

ஆனால், தங்கள் பேரணிக்கு தமிழ்நாடு அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்குத் தொடர்ந்தது. ஆனால், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் – உயர் நீதிமன்றம்

நீதிமன்றங்களின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. இந்தநிலையில், நாளை ஏப்ரல் 16-ம் தேதி காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறவிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.