‘திங்கட்கிழமை இருக்கு கச்சேரி’.. அரவிந்த் கெஜ்ரிவாலின் புது வியூகம் எடுபடுமா.?

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் நாளை ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், வருகிற திங்கட்கிழமை சட்டசபை சிறப்பு கூட்டத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind kejriwal) அழைப்பு விடுத்துள்ளார்.

ரெய்டு பாஜக

ஒன்றிய பாஜக (Bjp) அரசை கடுமையாக விமர்சிக்கும் கட்சிகள் மீது சிபிஐ மற்றும் அமலாக்குத்துறை ஆகிய அமைப்புகளை ஏவி விட்டு ரெய்டு நடத்துவது குறித்து எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். எதிர்கட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளால் சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்த நபர்கள், பாஜகவில் சேர்ந்ததும் அவர்கள் மீதான விசாரணை நிறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

உதாரணத்திற்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, மேற்கு வங்கத்தின் சுவேந்து அதிகாரி ஆகியோர் மீது ஊழல் வழக்குகள் இருந்த நிலையில், அவர்கள் பாஜகவில் சேர்ந்ததும் விசாரணை மந்தமானது. இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்கட்சிகள் ஒன்றிய அரசின் பாரபட்ச நடவடிக்கை குறித்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆனால் எதிர்கட்சிகளின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

மதுபான கொள்கை

இந்தநிலையில் டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கூறி டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். பாஜகவில் சேர தன்னிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக பொது வெளியில் அம்பலப்படுத்தியவர் தான் மணிஷ் சிசோடியா என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் தெலங்கானா முதல்வர் மகள் கவிதா மற்றும் ஆந்திரா ஆளுங்கட்சி எம்எல்ஏ மகன் மற்றும் தொழிலதிபர்களும் சிபிஐ-ஆல் விசாரிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் மதுக்கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் ஆட்சேபணம் தெரிவித்தனர். இந்தசூழலில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய புலனாய்வுத் துறை சம்மன் அனுப்பியது குறித்து விவாதிக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசு திங்கள்கிழமை சட்டசபையின் சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

திங்கட்கிழமை இருக்கு

எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதற்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குனரகம் (ED) ஆகியவற்றை பாஜக ஆயுதமாக ஏந்தியுள்ளதாக ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல் பொய் சாட்சியம் அளித்ததற்காகவும், நீதிமன்றங்களில் பொய்யான ஆதாரங்களைத் தயாரித்ததற்காகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது உரிய வழக்குகளை பதிவு செய்வோம் என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

கெஜ்ரிவாலின் ட்வீட்டுக்கு பதிலளித்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, டெல்லி முதல்வரின் மிரட்டல் குறித்து,

“உங்களை குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் நீதிமன்றத்திற்கு எதிராகவும் வழக்குத் தொடர்வீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா? சட்டம் அதன் போக்கை எடுக்கட்டும், நாம் சட்டத்தின் ஆட்சியை நம்ப வேண்டும். ED, CBI மற்றும் நீதிமன்றத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்வீர்களா?” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.