பெரியகுளம்: பெரியகுளத்தில் ஒரே சமூகத்தினரின் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் வடகரை ஆய்வாளரின் ஜீப், 108 ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் பொதுப் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதற்காக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கரின் முழு உருவச் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காலை முதல் இரவு வரை பால்குடம் எடுத்தல், ஊர்வலம், அஞ்சலி என்று ஒவ்வொரு தரப்பினும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்நிலையில், இரவு 10 மணிக்கு டி.கள்ளி்ப்பட்டி மற்றும் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் அக்னிச்சட்டி எடுத்தபடி மேளதாளத்துடன் ஆடியபடி வந்தனர். அப்போது ஒரே சமூகத்தைச் சேர்ந்த இந்த இரு தரப்பினரும் அஞ்சலி செலுத்துவதில் போட்டி ஏற்பட்டது.
இதில், ஒருவரை ஒருவர் தாக்கினர். அங்கிருந்த சேர்களை அடித்து வீசினர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், இவர்களை கட்டுப்படுத்த முடியாததால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் கோபமடைந்த அவர்கள், போலீஸார் மீது கற்களை வீசினர். இதில் ஆய்வாளர் மீனாட்சி உட்பட 10 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. ஆகவே, போலீஸார் அருகில் இருந்த வடகரை காவல் நிலையத்திற்குள் சென்றனர். தொடர்ந்து விரட்டிச் சென்ற அவர்கள் காவல் நிலையத்தில் கல் வீசி தாக்கினர். வளாகத்தில் நின்றிருந்த ஆய்வாளர் ஜீப், 108 ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் முகப்பு கண்ணாடியை உடைத்தனர்.
மேலும், பல்வேறு வழக்குகள் தொடர்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, டூவீலர்கள் போன்றவற்றையும் சேதப்படுத்தினர். பின்பு பலரும் தலைமறைவாகினர். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்உமேஷ்டோங்கரே பார்வையிட்டார்.
கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பெரியகுளத்தில் பொதுபோக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. நகருக்கு உள்ளே வரும் வாகனங்கள் அனைத்தும் புறவழிச்சாலை வழியே திருப்பி விடப்பட்டன. இதனால் பெரியகுளத்திற்கு பேருந்துகளில் வந்து கொண்டிருந்த பயணிகள் புறவழிச்சாலை பகுதியான எண்டப்புளி புதுப்பட்டியில் இறக்கிவிடப்பட்டனர்.
தொலைதூர பேருந்துகளில் பெரியகுளம் பயணிகள் ஏற்றாமல் தொடர்ந்து புறவழிச்சாலை வழியே கடந்து சென்றன. பெரியகுளத்தில் இருந்து ஆண்டிபட்டி, தேனி செல்லும் நகரப் பேருந்துள் நேற்று காலை 11.30 மணிக்குப்பிறகு வடகரை வழியே செல்லாமல், புறவழிச்சாலை வழியே சுற்றுப்பாதையில் இயங்கின. பேருந்து இயக்கத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் பெரியகுளம் பயணிகள் வெகுவாய் பாதிக்கப்பட்டனர். ஆட்டோக்கள், டூவீலர்கள் மூலம் ஊருக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது.
தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கலவரப் பகுதியினை தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க், திண்டுக்கல்சரக டிஐஜி அபினவ்குமார் ஆகியோர் நள்ளிரவில் முகாமிட்டு ஆய்வு நடத்தினர். தண்டுபாளையத்தில் உள்ள பள்ளிவாசல், சர்ச் மற்றும் வடகரை பகுதியில் உள்ள வங்கிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கலவரம் நடந்த பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 60-க்கும் மேற்ப்பட்வர்களை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதால் இன்று மதியம் முதல் பெரியகுளத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. போக்குவரத்தும் சீராகியுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.