2024 மக்களவைத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. முன்னெப்போதையும் விட இந்த தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு நிகராக பிராந்திய கட்சிகள் செல்வாக்கு செலுத்தும் என்று கூறப்படுகிறது.
ஒரு பக்கம் பாஜக வலுவாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் வலுவாக உள்ள பிராந்திய கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு கடுமையான போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பிராந்திய கட்சிகள் ஒரே அணியில் இணையுமா என்பது தான் தற்போது விடை தெரியாத கேள்வியாக உள்ளது. காங்கிரஸை கூட்டணிக்குள் இணைத்து ஒற்றை அணியாக இருந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்டவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்பட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் தயக்கம் காட்டுகின்றனர்.
பாஜகவை எதிர்ப்பதில் தீவிரம் காட்டும் மம்தாவும், கேசிஆரும் தங்கள் மாநிலங்களில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் தங்கள் கட்சியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன் தேசிய கட்சியாக தங்களை முன்னிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. காங்கிரஸின் இடத்தை நிரப்பலாம் என்பதே இவர்களது எண்ணமாக இருக்கிறது என்கிறார்கள்.
நேற்று 125 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவின் பேச்சு இதை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
“பாரதிய ராஷ்டிர சமிதி மகாராஷ்டிராவில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றது. மேற்கு வங்காளம், பீகார் மற்றும் உத்தர பிரதேசத்திலும் இதைப்போன்ற ஆதரவை எதிர்பார்க்கிறோம். நான் சில விஷயங்களைச் சொல்கிறேன். 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பின் அடுத்த அரசு நம்முடையது. இதை நம் எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம். ஆனால் விளக்கேற்ற ஒரு தீப்பொறி போதும்.
நாம் மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் தலித் குடும்பத்தினருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.10 லட்சம் மானியம் வழங்கும் தலித் பந்து திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்” என்று கூறினார்.
தலித் பந்து திட்டம் 2021ஆம் ஆண்டு முதல் தெலங்கானாவில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.