காபுல்,
ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நடைபெற்றது. அமெரிக்காவின் ஆதரவு பெற்ற அரசுக்கு எதிராக தலிபான்கள் ஆயுதப்போர் நடத்தினர். இந்த போரில் தலிபான்கள் வெற்றிபெற்று ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர்.
இந்த உள்நாட்டு போரின் போது பல்வேறு ஆயுதங்கள் அரசுப்படையினரால் கைவிடப்பட்டன. அந்த ஆயுதங்களை தற்போது தலிபான்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
இதனிடையே, உள்நாட்டு போரின்போது பல இடங்களில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டன. போருக்கு பின் இந்த கண்ணிவெடிகள் செயலிழக்கப்படாமல் அப்படியே இருந்ததால் அவ்வப்போது கண்ணிவெடிகள் வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் காந்தகார் மாகாணம் மியன்ஷின் மாவட்டத்தில் நேற்று 2 சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது, பூமிக்கு அடியில் இருந்து உலோகத்தாலான பொருளை சிறுவன் எடுத்துள்ளான்.
அது கண்ணிவெடி என்று அறியாத சிறுவர்கள் இருவரும் அதை வைத்து விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கண்ணிவெடி வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். மற்றொரு சிறுவன் பலத்த காயமடைந்த நிலையில் அவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தலிபான்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.