மத்திய ஆயுதக் காவல் படை நியமனங்களுக்கு தமிழ் உட்பட 15 மொழிகளில் தேர்வு: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) எழுத்து தேர்வு இனிமேல் இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2024 ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் மத்திய ஆயுதக் காவல் படைகள் (சிஏபிஎஃப்) அமைப்பு செயல்படுகிறது. நாடு முழுவதிலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்), எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), தேசிய பாதுகாப்பு படை(என்எஸ்ஜி), இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படை (ஐடிபிபி),எல்லை காவல் படை (சஷஸ்த்ர சீமா பல் – எஸ்எஸ்பி) ஆகிய பாதுகாப்பு படைகளை உள்ளடக்கியதே இந்த அமைப்பு ஆகும். இந்த அமைப்புக்கான காவலர் பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்தி, ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎஃப்) 9,212 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில், தமிழகத்துக்கு 579 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், காவலர்பணிக்கான கணினி வழி தேர்வுஇந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இதையடுத்து, சிஆர்பிஎஃப் தேர்வை தமிழ் உட்பட மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கான (சிஏபிஎஃப்) தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, கூடுதலாக தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளது. இதுகுறித்துஉள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தல்படி, மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கான (சிஏபிஎஃப்) காவலர் பணித் தேர்வை இந்தி, ஆங்கிலத்துடன் கூடுதலாக 13 மாநில மொழிகளில் நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர்இளைஞர்கள் சிஏபிஎஃப் படைகளில் அதிக அளவில் சேரவும்,மாநில மொழிகளை ஊக்குவிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

15 மொழிகள் என்ன?: இந்தி, ஆங்கிலம் தவிர, அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி,மணிப்புரி, கொங்கணி ஆகிய 13 மாநில மொழிகளிலும் இனிமேல் வினாத்தாள் தயாரித்து வழங்கப்படும். இந்த முடிவு, லட்சக்கணக்கான இளைஞர்கள் அவர்களது தாய்மொழியில் தேர்வு எழுத வழிவகுப்பதுடன், அவர்களது தேர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

பல்வேறு இந்திய மொழிகளில் தேர்வை நடத்துவதற்கு வசதியாக, உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆகியவை இப்போது வழக்கத்தில் இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூடுதலாக கையெழுத்திடும்.

மாநில மொழிகளில் தேர்வு என்பது வரும் 2024-ம் ஆண்டுஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வரும். இளைஞர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாட்டுக்கு சேவையாற்றவும், அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் அந்தந்த மாநில அரசுகள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வரவேற்பு: இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘இது நம் இளைஞர்களின் விருப்பங்களுக்கு சிறகுகளை வழங்கும் முன்மாதிரியான முடிவு. ஒருவரது கனவுகளை நிறைவேற்றுவதில் மொழி ஒரு தடையாக இருக்க கூடாது. அதை உறுதி செய்வதற்கான நமது பல்வேறு முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் நன்றி: மத்திய அரசின் அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் எழுதிய கடிதத்தின் பலனாக, அனைத்து மாநில மொழிகளிலும் சிஏபிஎஃப் தேர்வுகளை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை வரவேற்கிறேன். அனைத்து மத்திய அரசு தேர்வுகளிலும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் வினாத்தாள்களை வழங்குவதற்கான எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சசிகலா உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சிஆர்பிஎஃப் தேர்வை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்த வலியுறுத்தி திமுக இளைஞர், மாணவர் அணிகள் சார்பில் சென்னையில் ஏப்.17-ல் (நாளை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுகள் மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.