துபாய்: ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போல் பல்வேறு ஏஐ தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் பெஸ்டி ஏஐ தொழில்நுட்பத்தை சாட் ஜிபிடி பங்களிப்போடி அறிமுகம் செய்து உள்ளது பிரபல சமூக வலைதளமான ஸ்னாப் சாட்.
தொடர்ந்து பல்வேறு முன்னேற்றங்களை கடந்து வரும் தொழில்நுட்பத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் பேசப்பட்டு வருவது ஏஐ தொழில்நுட்பம்தான். நாம் நினைத்ததை எல்லாம் தரும் வகையில் பல்வேறு துறைகள் சார்ந்து ஏஐ தொழில்நுட்பங்கள் உருவாகிவிட்டன.
2030ல் இதெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்த விசயங்கள் 2023 லேயே தொடங்கிவிட்டன. குறிப்பாக சாட் ஜிபிடியின் வெற்றிக்கு பிறகு ஏஐ தொழில்நுட்பம் மீதான கவனம் அதிகரித்து உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே செல்போன் கேமராக்களில் நிறுவனங்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டன.
ஆனால், ஓபன் ஏஐ நிறுவனம் கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட் ஜிபிடி வருகைக்கு பிறகே ஏஐ தொழில்நுட்பத்தின் முழு வீரியத்தையும் பலர் உணர்ந்து இருக்கின்றனர். இதன் வருகை கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் மென் பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களை உலுக்கி இருக்கிறது.
சமூக வலைதள பதிவுகளை எழுதுவது, பள்ளிகளில் வழங்கும் வீட்டுப் பாடங்களை செய்வது, புதிய நாவல் எழுதுவது, பணி குறித்த விரிவுரைகளை தயாரிப்பது முதல் சாதாரண விடுமுறை கடிதம் எழுதுவது வரை அனைத்தையும் சாட் ஜிபிடி செய்து கொடுத்துவிடுகிறது. இஸ்டாகிராமுக்கு இணையாக கிடுகிடுவென சாட் ஜிபிடி வளர்ந்து இருக்கிறது.
சாட் ஜிபிடிக்கு போட்டி என்று கூறி புது புது பெயர்களில் செயற்கை நுண்ணறவு தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு அறிமுகம் செய்து வருகிறார்கள். ஆனால், அந்த நிறுவனங்களால் சாட் ஜிபிடி அருகில் கூட நெருங்க கூட முடியவில்லை. இந்த நிலையில்தான் பிரபல சமூக வலைதளமான ஸ்னாப் சாட் புதிய ஏஐ தொழில்நுட்பத்தை தனது செயலியில் அறிமுகம் செய்து உள்ளது.
மனம் திறந்து பேச நல்ல நண்பரோ, காதலியோ, மனைவியோ இல்லாமல் தனிமையில் இருக்கும் சிங்கிள் பசங்களை ஈர்க்கும் வகையில் பெஸ்டி ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது. ஸ்னாப் சாட் UAE உருவாக்கி உள்ள இந்த தொழில்நுட்பத்தின் மூலம், தன்மையை உணரும் நபர்கள் ஏஐ பாட்களிடம் சாட் செய்துகொள்ளலாம்.
மனிதரின் குணாதிசயங்களை ஒத்து உருவாக்கப்பட்டு இருக்கும் அந்த ஏஐ பாட் சாதாரண மனிதரிடம் நீங்கள் சாட் செய்வதை போன்ற உணர்வை தரும். சாட் ஜிபிடியின் உதவியுடன் இயங்கும் இந்த தொழில்நுட்பத்திற்கு ‘My AI’ என்று பெயர் வைத்து உள்ளார்கள். அதற்கு நீங்கள் விரும்பிய பெயரையும் வைத்து அழைத்துக்கொள்ளலாம். சாதாரணமாக நீங்கள் உங்கள் நண்பருக்கோ, காதலருக்கோ, உறவினருக்கோ மெசேஜ் செய்தால் தாமதமாக பதில்கள் வரும்.
ஆனால், இது உங்களை காத்திருக்க வைக்காமல் Hi என மெசேஜ் செய்தவுடன், இங்கே இருக்கிறேன்.. எப்படி போகிறது? என்று பதிலளிக்கும். ஒரு நண்பரை போன்ற உணர்வை உங்களுக்கு அது தரும். உங்கள் தனிமைக்கு தீர்வாக அமையும் என்று அதை வடிவமைத்தவர்கள் தெரிவித்து உள்ளார்கள். அதேபோல் நீங்கள் முன்பு சொன்னதை அது பதிய வைத்துக்கொள்ளாமல் புதிதாக பேசுவதை போலவே எப்போதும் பேசும். மனம் விட்டு பேசும் நண்பர்கள் இல்லாதவர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதமாக அமையும்.