மோடியை புகழும் ஓபிஎஸ்: திருச்சியில் நிகழுமா திருப்பம்? களத்தில் தீவிரம் காட்டும் வைத்திலிங்கம்

அதிமுகவின் உச்ச பதவியைக் கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்றத்தின் படிகட்டுகளில் அடுத்தடுத்து ஏறிய போதும் ஏமாற்றமே மிஞ்சியது. உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து தன் பக்கம் கட்சி வராதா என்று கணக்கு போட்டு வருகிறார்.

பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் கைவிட்ட நிலையில், பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பும் ஓபிஎஸ் தரப்பை அப்செட் ஆக்கியது. இதனால் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மேல்முறையீடு செய்த நிலையில் அது தொடர்பான இறுதி விசாரணை இன்னும் சில தினங்களில் நடைபெறுகிறது.

நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகாத நிலையில் மக்கள் மன்றத்தை நாடி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். திருச்சியில் ஏப்ரல் 24ஆம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடத்தி பெரிய கூட்டத்தை கூட்டி மக்கள் ஆதரவும், அதிமுக தொண்டர்கள் ஆதரவும் தனக்கு இருக்கிறது என்பதை காட்ட ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.

இதற்கான பணிகளை ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் பார்த்து வருகின்றனர். குறிப்பாக வைத்திலிங்கம் இந்த பணிகளில் வேகம் காட்டுவதாக சொல்கிறார்கள். இதுவரை எப்படியோ இனியும் தனது கஜானாவை திறக்காமல் ஒன்றும் நடக்காது என தாமதமாக புரிந்துகொண்ட ஓபிஎஸ்ஸும் செலவழிக்க தயாராகிவிட்டாராம்.

இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருந்து ஒரு பெரிய படையை திருச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ள ஓபிஎஸ் தனது பெரியகுளம் பண்ணை வீட்டில் மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

அந்த கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்ஸால் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நகர், ஒன்றிய, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டர்.

அப்போது பேசிய ஓபிஎஸ், “திருச்சியில் வரும் 24ஆம் தேதி நடக்கும் மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள், அவரவர் பகுதியில் இருந்து திரளான தொண்டர்களை கொண்டு வர வேண்டும்.

சசிகலா மற்றும் டிடிவி.தினகரனிடம் முதல்வர் பதவியைப் பெற்று, பின்பு அவர்களையே ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. அதையே சசிகலா மற்றும் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழகத்திற்கு முழுமையாக ஜல்லிக்கட்டை பெற்று தந்தவர் பிரதமர் மோடி. உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான், நான் அல்ல. மாவட்ட செயலாளர் சையதுகான், டிடிவி.தினகரன் சந்திப்பை நான் இதுவரையிலும் தடுக்கவில்லை. என்னையும் டிடிவி.தினகரனையும் சமாதானப்படுத்தி சையதுகான் ஒன்றிணைத்து விடுவார்” என்று பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.