“ரூ.3.25 லட்சம் வாடகை, ரூ.3 லட்சம் வாட்ச்… அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும்” – கே.எஸ்.அழகிரி

சென்னை: “பாஜக தலைவர் அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? மூன்று லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக, ஒருமுறை மக்களவை உறுப்பினராக இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூபாய் 16,000 வாடகைக்கு குடியிருக்கிறேன். ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என்று நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன்.

நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? மூன்று லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்றும், தனது ரபேல் வாட்ச் தொடர்பான விவரங்கள் என்றும் சில தகவல்களை www.enmannenmakkal.com என்ற இணையதளத்தில் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், மாநிலத் தலைவராக எனக்கு மாதத்துக்கு ரூ.8 லட்சம் செலவாகிறது. நண்பர்கள், கட்சியின் உதவியால்தான் இவற்றைச் சமாளிக்க முடிகிறது. காருக்கு டீசல், உதவியாளர்கள் ஊதியம், வீட்டு வாடகைஎன அனைத்தையும் மற்றவர்கள்தான் கொடுக்கிறார்கள்.

நான் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் `பெல் அண்ட் ரோஸ்’ என்ற நிறுவனம், ரபேல் விமானத்தை தயாரித்த பிரெஞ்சு நிறுவனத்துடன் சேர்த்து தயாரித்தது. உலகில் மொத்தமே 500 ரபேல் வாட்ச்-கள்தான் உள்ளன. நான் கட்டியிருப்பது 147-வது வாட்ச். இந்தியாவில் 2 ரபேல் வாட்ச்-கள் மட்டும்தான் விற்றுள்ளன. இதில் ஒன்றை மும்பையைச் சேர்ந்த ஒருவர் வைத்துள்ளார்” என்று கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.