குவாஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாதலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் குவாஹாத்தி நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.3,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
குவாஹாத்தியில் ரூ.1,123 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். இது வடகிழக்கின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகும். அசாமின் நல்பாரி, நகாவோன், கோகராஜ்ஹர் நகரங்களில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளையும் அவர் திறந்துவைத்தார். மேலும் ரூ.14,300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:
பிஹு திருநாளில் வடகிழக்கின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறது. அதோடு அசாமில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. குவாஹாத்தி ஐஐடி உடன் இணைந்து நவீன ஆராய்ச் சிக்காக 500 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. ஒருகாலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் பின்தங்கிய நிலையில் இருந்தன. இப்போது வட கிழக்கு மாநிலங்களுக்கு வருவோர் சாலை, ரயில், விமான போக்குவரத்து வசதிகளை பார்த்து பிரமிக்கின்றனர்.
கடந்த 9 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்தசாதனைகள் குறித்து பேசி வருகிறேன். இது சிலருக்கு வருத்தமாக இருக்கிறது. இது ஒரு புது வகையான நோய். நமது நாட்டை மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள், தங்களுக்கு எந்த பெருமையும் கிடைக்கவில்லை என்று புலம்புகின்றனர். அவர்களது சாதனை வறுமை மட்டுமே. வடகிழக்கு மாநிலங்களை அவர்கள் புறக்கணித்தனர். எங்களைப் பொறுத்தவரை மக்களின் சேவகன் என்ற வகையில் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றி வருகிறோம்.
டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவ மனை 1956-ம் ஆண்டில் கட்டப்பட் டது. இதேபோல நாட்டின் பிற பகுதிகளிலும் எய்ம்ஸ் திறக்கப்பட வேண்டும் என்று அப்போதைய ஆட்சியாளர்கள் நினைக்க வில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இதற்கான முயற்சிகளை தொடங்கினார். இதன்பிறகு கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு நாடு முழுவதும் சுமார் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில் 150 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே கட்டப்பட்டன. பாஜக ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் 300 புதியமருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டு களில் எம்பிபிஎஸ் இடங்கள் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளன. மருத்துவ முதுகலை இடங்களின் எண்ணிக்கை 110 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் 150-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளோம். வாக்கு வங்கிஅரசியலுக்கு பதிலாக நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இதன்படி ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தினோம். இதன்மூலம் ஏழை குடும்பங்கள் ரூ.80,000 கோடி அளவுக்கு பலன் அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டு, குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. இதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட் விலை குறைப்பு, மூட்டு சிகிச்சை உள்வைப்புகளுக்கான விலை குறைப்பால் ரூ.13,000 கோடி அளவுக்கு நோயாளிகள் பலன் அடைந்துள்ளனர்.
மாவட்டம் தோறும் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதன்மூலம் சிறுநீரக நோயாளிகள் ரூ.500 கோடி அளவுக்கு பணத்தை மிச்சப்படுத்தி உள்ளனர். நாடு முழுவதும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
21-ம் நூற்றாண்டை கருத்தில்கொண்டு நாட்டின் சுகாதாரத் துறையை மத்திய அரசு நவீனப்படுத்தி வருகிறது. இ-சஞ்சீவனி திட்டத்தில் 10 கோடி பேர் தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். இந்தியாவின் கரோனா தடுப்பூசி திட்டத்தை ஒட்டுமொத்த உலகமும்பாராட்டி வருகிறது. ஆரோக்கியமான இந்தியா, வளமான இந்தியா என்ற லட்சியத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.