சென்னை:
அதிமுகவை சீண்டும் வகையில் அண்ணாமலை வார்த்தையை விட்டது தற்போது அக்கட்சியினரை சூடாக்கியுள்ளது. இதுவரை எத்தனையோ தருணங்களில் அண்ணாமலையை பட்டும் படாமல் விமர்சித்து வந்த அதிமுகவினர், தற்போது தரை லோக்கலாக இறங்கி விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
அதிமுக – பாஜக இடையேயான உறவில், சமீபகாலமாக ஒருவித மோதல்போக்கையே பார்க்க முடிகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக சந்தித்த புறக்கணிப்பு, அண்ணாமலையை விமர்சித்துவிட்டு பாஜகவில் இருந்து விலகியவர்களை எடப்பாடி பழனிசாமி புன்முறுவலுடன் அதிமுகவில் இணைத்துக் கொண்டது என அடுத்தடுத்து அவர்கள் கூட்டணியில் விரிசல் அதிகரித்துக் கொண்டே வந்தது.
ஒருகட்டத்தில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் நான் ராஜினாமா செய்து கொள்வேன் என அண்ணாமலை கூறும் அளவுக்கு அந்த விவகாரம் சென்றது.
இந்த நிலையில்தான், நேற்று திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக கூறிவிட்டு, அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. அத்துடன் அவர் நின்றிருக்கலாம். ஆனால், அதிமுகவை சீண்டும் விதமாக, தமிழகத்தில் ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை பேசினார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுதான் அதிமுகவினரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. இதுவரை அண்ணாமலை விவகாரத்தில் பட்டும் படாமல் பேசி வந்த அதிமுக, தற்போது இறங்கி அடிக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக ஜெயக்குமாரின் இன்றைய பேட்டியிலேயே அந்த அனல் வெளிப்பட்டது. “அண்ணாமலையை பொறுத்தவரை நான் சேலஞ்ச் கூட செய்கிறேன்.. அவர் அதிமுகவின் ஊழல் பட்டியல் என்று சொல்லட்டும்.. அதிமுக என சொல்லட்டும்.. அப்புறம் எங்கள் ரியாக்சனை பாருங்க.. இந்த மறைமுக மிரட்டல், பூச்சாண்டி எல்லாம் அதிமுகவிடம் நடக்காது.. இதுக்கெல்லாம் பயப்படுற ஆளுங்க நாங்க இல்ல..” என காட்டமாகவே பேசினார் ஜெயக்குமார்.
அதேபோல, அண்ணாமலையை அதிமுக நேரடியாகவே விமர்சித்திருக்கிறது. இதுகுறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்றைய திமுக சொத்துப் பட்டியல் ஒரு நகைச்சுவை காட்சி. இதில் அதிமுகவை சாரந்தவர்களின் பட்டியலையும் வெளியிடப் போறாராம். அவசரத்துல கைய விட்டா அண்டாக்குள்ள கூட கை போகாதுன்னு சொல்லுவாங்க.. அண்ணாமலை பதட்ட படாமல் அரசியல் பண்ண வேண்டும்” எனக் கூறியுள்ளார். இவ்வாறு அண்ணாமலையை சகட்டுமேனிக்கு அதிமுக விமர்சித்து வருவதால், அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.