16-வது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி ஐ.பி.எல் எனப் பல கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கூறிவரும் நிலையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் அதன் ரசிகர்கள் உள்ளனர்.
சென்ற வருட ஐ.பி.எல் தொடரின் போது, சென்னையில் விளையாடிய பிறகுதான் ஓய்வு பெறுவேன் என தோனியும் அறிவித்திருந்தார்.
இந்த சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் என்று சிலர் கூறினாலும் சிலர் இல்லை, தோனி இன்னும் முழு உடல்தகுதியுடன் இருக்கிறார். சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ஓய்வு பெறுவதற்கான அவசியமே இல்லை என்று கூறிவருகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற கருத்துக்களைப் பலரும் தெரிவித்து வரும்நிலையில் `தோனி இந்த சீசனோடு கட்டாயம் ஓய்வு பெற்று விடுவார்’ என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ”உறுதியாகச் சொல்கிறேன் தோனிக்கு இதுதான் கடைசி ஐ.பி.எல். இந்த சீசனோடு கட்டாயம் அவர் ஓய்வு பெற்றுவிடுவார் ஜியோ சினிமாவில் தோனி விளையாடிய போட்டியை அதிகபட்சமாக 2.2 கோடி பேர் பார்த்தனர் என்று கேள்விப்பட்டேன். இது இந்த சீசனின் ஆரம்பம்தான். இன்னும் நிறைய பேர் அவரது விளையாட்டை நேரலையில் மற்றும் நேரில் வந்து பார்க்க வேண்டும்.
சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இருக்கிறது. பென் ஸ்டோக்ஸிற்கு கேப்டனாக வாய்ப்பு இருந்தாலும் ஐ.பி.எல் இல் அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்பது சந்தேகத்திற்குரியது. ருத்துராஜை பொறுத்தவரை உள்ளூர் போட்டிகளில் மகாராஷ்டிரா அணியை நன்றாக வழி நடத்துகிறார். சிஎஸ்கேவிற்காக பேட்டிங்கிலும் நன்றாக வழிநடத்துகிறார். இதனால் சிஎஸ்கே அணியில் கேப்டன் பொறுப்பு இவருக்கு கிடைக்க வாய்ப்பு அதிகம்” என்று கேதர் ஜாதவ் தெரிவித்திருக்கிறார்.