தோனிதான் நம்பர் 1
2023 ஐபிஎல் சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டது. இந்நிலையில் ஆர்மேக்ஸ் மீடியா என்ற தனியார் செய்தித் தொடர்பு நிறுவனம், ஐ.பி.எல் தொடர் பற்றி ஒரு பட்டியலை வெளியிட்டியிருக்கிறது. இப்பட்டியலில் முதல் இரண்டு வாரங்களில், `மிகவும் பிரபலமான ஐ.பி.எல் அணிகள்’ என்ற பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.
அதேபோல், `மிகவும் பிரபலமான ஐபிஎல் வீரர்கள்’ என்ற பிரிவில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலிடத்தை பிடித்துள்ளார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஹாரி ப்ரூக்கின் அசாத்திய சாதனை!
நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஹாரி ப்ரூக். இதில் 55 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சதமடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவருக்கு முன்பாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் சதமடித்துள்ளனர். இந்த நடப்பு, 2023 ஐபிஎல் சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவே ஆகும்.
இப்போட்டிக்குப் பிறகு பேசிய அவர், “நீங்கள் சமூக ஊடகங்களுக்குச் சென்றால், உங்களை குப்பை என்று பலர் சொல்வார்கள். இன்று என்னைப் பாராட்டும் இந்திய ரசிகர்கள் பலர், சில நாட்களுக்கு முன்பு என்னைத் திட்டினார்கள். அவர்களின் அமைதியாக இருக்கச் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” எனக் கூறினார்.
ஆர்சிபி-யில் இணையும் ஹேசில்வுட்:
ஆஸ்திரேலிய வேகபந்துவீச்சாளரான ஹேசில்வுட், நேற்று ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார். ரூபாய் 7.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், காயம் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்கப் போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், அணியின் பந்துவீச்சாளர்கள் சொதப்பியதால் பெங்களூர் அணி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், இவரின் வருகை ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. மேலும், இனிவரக்கூடிய அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தாவில் இணையும் புதுமுக வீரர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மேலும் ஒரு புது இளம் வீரரை அணியில் சேர்த்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த 20 வயதான ஆர்யா தேசாய், 20 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. இதுவரை 3 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 151 ரன்கள் எடுத்துள்ளார். மீதமுள்ள கொல்கத்தா அணியின் போட்டிகளில் இவர் விளையாடுவார் என ஐபிஎல் நிர்வாகம் தனது வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
ஹர்திக்கை அழைத்த லக்னோ!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட்டில் கௌரவ் கபூருடன் பேசினார். இதில் பேசும்போது, “ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஒரு புதிய அணியிடமிருந்து (லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்) எனக்கு அழைப்பு வந்தது. எனக்குத் தெரிந்த ஒருவர், (கே.எல்.ராகுல்) அணியை வழிநடத்துகிறார்.” எனக் குறிப்பிட்டார். பின்னர், பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா அழைத்ததால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாட வந்தேன் எனவும் பேசினார்.