பிரயாக்ராஜ்: நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அத்திக் அகமது கொலை வழக்கில் கைதான மூவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு நேற்றிரவு நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அத்திக் அகமது, காவலர்களால் அழைத்து வரப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாவைச் சேர்ந்த லுவ்லேஷ் திவாரி, ஹமிர்பூரைச் சேர்ந்த சன்னி என்ற மோஹித் மற்றும் கஸ்கஞ்சைச் சேர்ந்த அருண் குமார் மவுரியா ஆகியோர் தான் அந்த மூவர். இதில், காஸ்கஞ்சைச் சேர்ந்த அருண் குமார் மவுரியாவுக்கு வயது 18 ஆகிறது. மற்றவர்களான லுவ்லேஷ் திவாரிக்கு 22 வயதும், மோஹித்துக்கு 23 வயதும் ஆகிறது.
அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மருத்துவமனைக்கு அழைத்துவரும்போது அவர்களிடம் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சூழ்ந்தனர். செய்தியாளர்களை போல கைகளில் மைக், ஐடி கார்டு மற்றும் கேமராவுடன் வந்த லுவ்லேஷ் திவாரி உள்ளிட்ட மூவரும் திடீரென தங்கள் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு அத்திக் அகமதுவை சுட்டுள்ளனர். தொடர்ந்து அஷ்ரப் அகமதுவையும் சுட்டு கொலை செய்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த காட்சிகள் நேரலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட மூவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிக்க அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) அரவிந்த் குமார் திரிபாதி, பிரிஜேஷ் குமார் சோனி மற்றும் முன்னாள் டிஜிபி சுபேஷ் குமார் சிங் ஆகியோர் தலைமையில் 3 பேர் கொண்ட நீதித்துறை குழுவை உத்தரபிரதேச அரசு அமைத்தது. 3 பேர் கொண்ட குழு இரண்டு மாதங்களில் தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணை கமிஷன் சட்டம், 1952ன் கீழ் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.