வாஷிங்டன்-”இந்தியா – அமெரிக்கா இணைந்து வலுவான, அமைதியான மற்றும் இணக்கமான உலகளாவிய சமூகத்திற்கான அடித்தளத்தை உருவாக்கி வருகின்றன,” என, அமெரிக்காவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு, இந்திய துாதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
இந்தியா – அமெரிக்கா என்ற இரண்டு ஜனநாயக நாடுகளின் முன் எத்தனையோ சவால்கள், பிரச்னைகள் இருந்தாலும், நம் நேர்மறையான சிந்தனை உணர்வு நம்மை காக்கிறது.
இந்தியா – அமெரிக்கா இணைந்து வலுவான, அமைதியான மற்றும் இணக்கமான உலகளாவிய சமூகத்திற்கான அடித்தளத்தை உருவாக்கி வருகின்றன. இந்தியாவில் உள்ள, ‘டிஜிட்டல்’ பணப்பரிவர்த்தனைக்கான தளங்கள், உள்ளூர் மொழிகளில் இருப்பதே அதன் வெற்றிக்கு காரணம்.
இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில், அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்ற 15 மொழிகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இணைக்கப்பட்டுள்ளன.
எனவே, நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் பன்முகத்தன்மை உடைய ஒவ்வொரு அம்சமும் சாதகமாக மாற்றப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
காஞ்சிபுரம் பட்டு!
இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் விதமாக, வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நம் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. மதுபானி ஓவியங்கள், டார்ஜிலிங், அசாம் மற்றும் நீலகிரி தேயிலைகள், காஞ்சிபுரம் பட்டு புடவைகள், காஷ்மீர் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன.