விசாகப்பட்டினம்: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவும் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி படுகொலை வழக்கில் ஜெகனின் மற்றொரு உறவினரான ஒய்.எஸ்.பாஸ்கர ரெட்டி சிபிஐயால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடப்பா லோக்சபா தொகுதி எம்பியான அவினாஷ் ரெட்டியின் தந்தைதான் ஒய்.எஸ். பாஸ்கர ரெட்டி.
ஆந்திரா அரசியலில் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்றது ஒய்.எஸ்.ஆர் எனும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி குடும்பம். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தந்தை ஒய்.எஸ். ராஜா ரெட்டி 1998-ம் ஆண்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை சம்பவத்தில் தெலுங்குதேசம் கட்சியின் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆந்திராவில் மக்கள் தலைவராக விஸ்வரூபமெடுத்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபாத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர். மகன் ஜெகன் மோகன் ரெட்டி தீவிர அரசியலில் இறங்கினார். தற்போது ஆந்திரா முதல்வராகவும் இர்ந்து வருகிறார்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை சம்பவம் ஜெகன் குடும்பத்தில் நிகழ்ந்த 3-வது அசாதாரணம மரணமாகும். ஆந்திராவில் எதிர்க்கட்சியாக இருந்த போது சித்தப்பா விவேகானந்தா ரெட்டி படுகொலைக்கு சிபிஐ விசாரணை கோரியவர் ஜெகன். இப்போது சிபிஐ இவ்வழக்கை விசாரித்து வருகிறது. ஆனால் தாம் முதல்வரான போது விசாரணை குழுக்களை மாற்றி மாற்றி அமைத்தார் ஜெகன். இதனால் அவர் மீது விவேகானந்த ரெட்டி மகள் அதாவது ஜெகனின் சித்தப்பா மகள் சுனிதா ரெட்டி, சந்தேகப் புகாரும் கொடுத்திருந்தார்.
இதனிடையே விவேகானந்தா ரெட்டி கொலை வழக்கில் கடப்பா எம்பியும் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்ட்டியின் உறவினருமான அவினாஷ் ரெட்டியின் நெருக்கமான உதவியாளர் கஜாலா உதயகுமார் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து 48 மணிநேரத்துக்குள் அவினாஷ் ரெட்டியின் தந்தையும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினருமான ஒ.எஸ்.பாஸ்கர ரெட்டி அதிரடியாக சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
2019-ம் ஆண்டு தேர்தலின் போது கடப்பா தொகுதி எம்பி சீட்டை அவினாஷ்க்கு தரவே கூடாது என முட்டுக் கட்டை போட்டவர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்தா ரெட்டி. அவினாஷ்க்கு பதில் ஜெகன் சகோதரி சர்மிளா, ஜெகன் அம்மா உள்ளிட்ட ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என குடும்பத்தில் போராடியவர் விவேகானந்தா ரெட்டி. இதனால்தான் அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.